கடந்த 2016ம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற MS804 ஏர்பஸ் ஏ320 ரக எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 40 எகிப்தியர்களும் 15 பிரெஞ்சு பிரஜைகளும் அடங்குவர். விமானத்தில் இரண்டு ஈராக்கியர்கள், இரண்டு கனடியர்கள் மற்றும் அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்ச்சுகல், சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் இருந்தனர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு கிரீஸ் அருகே கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடந்த போது, தீவிரவாத தாக்குதலால் விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறினர். ஆனால் எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்க்கு பொறுப்பேற்கவில்லை. விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து நிபுணர்கள் வெளியிட்ட 134 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ அறிக்கை கடந்த மாதம் பாரிஸில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ‘எகிப்து விமானமான MS804 -ல் விமானி காக்பிட்டில் சிகரெட்டைப் பற்றவைத்ததால், விபத்து ஏற்பட்டது. விமானிகளுக்கான அறையில் இருந்த இந்த விமானத்தின் விமானி அலி அலி ஷௌகேர், சிகரெட் பற்றவைப்பதற்காக லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்ஸிஜன் கசிந்தது. இதனால் ஏற்பட்ட தீப் பொறியானது, விமானியின் அறையில் பரவியது.
அதன்பின் விமானத்திலும் பரவியதால் கோரமான விபத்து ஏற்பட்டது. அதன் பின் அந்த விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்தது. அதில் இருந்த 66 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், 40 எகிப்தியர்களும், 15 பிரான்ஸ் குடிமக்களும் உயிரிழந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்திய விமானிகள் காக்பிட்டில் எப்பொமுதும் புகைபிடிப்பதாகவும், விபத்து நடந்த போது அந்த நடைமுறையை விமான நிறுவனம் தடை செய்யவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது .