56 வயதில், ஒடிசாவில் உள்ள புல்பானியைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சட்டமன்ற உறுப்பினர் அங்கதா கன்ஹார், இறுதியாக தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றியுள்ளார்.
வெள்ளிக்கிழமை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு மாநில வாரியத் தேர்வில் பங்கேற்ற 5.8 லட்சம் மாணவர்களில் கன்ஹரும் ஒருவர். கந்தமால் மாவட்டத்தின் பிதாபரி கிராமத்தில் உள்ள ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில், தனது நண்பர்கள் மற்றும் 67 மாணவர்களுடன் தேர்வெழுதினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் காரணமாக பத்தாம் வகுப்புத் தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 1980 களில் எனது படிப்பு நிறுத்தப்பட்டது, பல ஆண்டுகளாக, எனது வயதுடையவர்கள் அல்லது என்னை விட வயதானவர்கள், கடினமாக உழைத்து படிப்பை முடித்தவர்கள் பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டேன். விருப்பம் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் படிப்பை முடிக்கலாம். தேர்வில் கலந்து கொண்டு படிப்பை முடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் நான் அவ்வாறு செய்ய பயந்தேன். எனது குடும்பத்தினர், எனது நண்பர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அனைவரும் என்னை ஊக்கப்படுத்தினர். ”என்று கன்ஹர் கூறினார்.
"கல்வி ஒரு நல்ல வேலையை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அறிவையும் மதிப்பையும் சேர்ப்பதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.