கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் தங்கவேலு
இந்நிலையில் நிலத்தகராறு தொடர்பாக வழக்கு ஒன்று டிஎஸ்பி தங்கவேலுவிடம் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக ஒரு தரப்பினரை மிரட்டி தங்கவேலு ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து லஞ்ச் ஒழிப்பு துறையினருக்கு தெரியப்படுத்தி உள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி அந்த நபர் ரசாயனம் தடவப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை டிஎஸ்பி தங்கவேலுவிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை டிஎஸ்பி வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் டி.எஸ்.பி. பீட்டர்பால் இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரமா, சிவசங்கரி ஆகியோர் திடிரென நுழைந்து டிஎஸ்பி தங்கவேலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் ராமன்புதூர் சந்திப்பில் உள்ள டி.எஸ்.பி. தங்கவேலு தங்கியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 7 மணி வரை நடந்தது. சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது.
அந்தப் பணம் குறித்து டி.எஸ்.பி. தங்கவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். அவர் பணத்தை தனது நண்பரிடம் வாங்கியதாக கூறினார். அந்த நண்பர் யார்? என்ற விவரங்களை போலீசார் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை.
12 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு டி.எஸ்.பி. தங்கவேலின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து மொத்தம் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். லஞ்சம் கேட்டு வாங்குதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட தங்கவேலுவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்
கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தங்கவேல் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரே லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.