நெல்லை மாவட்டம், நாஞ்சான்குளம் பகுதியில் நிலத்தில் கிணறு தோண்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகறாறில் பெண் உள்பட மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ளது நாஞ்சான்குளம். இங்கு நிலம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்துவந்தது. இருதரப்புமே அந்த நிலத்தைச் சொந்தம் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை பிரச்சினைக்குரிய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒருதரப்பினர் வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வந்தவர்கள், எதிர்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் வசந்தா(40), ஜேசுராஜ்(73), மாயராஜ்(56) ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவருமே உறவினர்கள் ஆவார்கள். வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பதிவு எழுத்தராகப் பணிசெய்துவந்தவர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலையானதைத் தொடர்ந்து நாஞ்சான்குளம் பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற நெல்லை சரக டி.ஐ.ஜி-யான பிரவேஷ்குமார், எஸ்.பி-யான கிருஷ்ணராஜ ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் அமைதி ஏற்படும் வகையில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்துப் பேசிய டி.ஐ.ஜி-யான பிரவேஷ்குமார், “உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொடர்புடைய ராஜமாணிக்கம், பேச்சியம்மாள், செந்தூர்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம். மேலும், இருவரைத் தேடி வருகிறோம்” என்றார்
#Nellai