2 சிறுவர்களை கொன்ற சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து. இவருடைய மனைவி உஷாராணி. இவர்களது மகன் சீமான் அல்போன்ஸ் மைக்கேல் (12). உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் அடிக்கடி தனது அக்கா வீட்டுக்கு செல்லும்போது, 

அங்கு இருந்த ஜோதி முத்துவின் தம்பி லாரி டிரைவரான ரத்தினராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு ரத்தினராஜ், மகாலட்சுமியை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டார். 

இதனை அறிந்த ஜோதிமுத்து வெளியூருக்கு தேடிச் சென்று 2 பேரையும் வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு ஜோதிமுத்து மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகன் உண்டு. 

மேலும் திருமணத்துக்கு பிறகும் மகாலட்சுமி, ரத்தினராஜூடன் தொடர்ந்து பழகி வந்தார். அவர்கள் 2 பேரும் தனிமையில் இருப்பதை சீமான் அல்போன்ஸ் மைக்கேல் பார்த்து, தனது தந்தை ஜோதிமுத்துவிடம் கூறினான். 

இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ரத்தினராஜை கண்டித்தனர். அதன்பிறகு மகாலட்சுமி, ரத்தினராஜிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினராஜ் கடந்த 22.3.2020 அன்று தனது அண்ணன் மகன்களான சீமான் அல்போன்ஸ் மைக்கேல், எட்வின் ஜோசப் ஆகிய 2 சிறுவர்களையும் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார்.  

அங்கு கிணற்றில் தள்ளி 2 சிறுவர்களையும் கொலை செய்தார். இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினராஜை கைது செய்தனர். 

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப்ஸ் நிக்கோலஸ் அலெக்ஸ் குற்றம் சாட்டப்பட்ட ரத்தினராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். 

மேலும் இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கவும், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும், ரூ.200 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜர் ஆனார்.

Previous Post Next Post