தூத்துக்குடி மாநகராட்சி; முதல் கூட்டத்தில் 21 தீர்மானம் நிறைவேற்றம் - அதிமுக வெளிநடப்பு.!


தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் முதல் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர்  சாருஸ்ரீ துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  


முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்திற்கு மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் தொடங்கியது.


மாமன்ற கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வ.உ.சி துறைமுகம் செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.15 கோடி வசூலிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, 


வஉசி சந்தையில் கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம், போல்டன் புரத்தில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 21 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.


சொத்து வரியை குறைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட வேண்டும் என அதிமுக கவுன்சிலர் கூறினர்.


மேலும், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சொத்து வரி  குறித்து விவகாரம் பேசப்பட்டது. உங்கள் ஆட்சியில் தான் வரி உயர்வு என இரண்டு தரப்பும் கடும் வாதம் செய்தது. அதன் பிறகு எதிர்கட்சி தலைவரும், அதிமுக கவுன்சிலருமான வீரபாகு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Previous Post Next Post