விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம் திட்டம் மூலமாக 1 கோடி மரங்களை விரைவில் நட இந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விவேக் ஒரு சமூக ஆர்வலரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் மீது பேரன்பு கொண்டவரான விவேக், கிரீன் கலாம் திட்டம் எனும் பெயரில் 1 கோடி மரங்கள் நடும் முன்முயற்சியை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தார்.
நாடு முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில் விவேக் அகால மரணம் அடைந்து அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, கிரீன் கலாம் திட்டத்தை முன்னெடுத்து செல்லும் முயற்சியை விவேக் உடன் 26 ஆண்டுகள் பயணித்த நடிகர் செல் முருகன் தொடங்கி உள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காவல் துறை உயர் அதிகாரியான அரவிந்தன் ஐபிஎஸ், பாபி சிம்கா, பூச்சி முருகன், நடிகர் உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவேக்கின் லட்சிய இலக்கான 1 கோடி மரங்களை நடும் பணி விரைவில் நிறைவடையும் என்று உறுதிபட தெரிவித்த செல் முருகன், பல படங்களில் தான் தற்போது நடித்து வருவதாகக் கூறினார்.