ஏப்.19ல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா போட்டிகள் : மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 19ம் தேதி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 17, நாள்: 31.08.2021இன்படி "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

தற்போது 2022-2023ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர்.

கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ.3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ. 3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000-வீதம் வழங்கப்பெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post