தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன், கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன், கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு டாக்ஸியில் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்தபோது சாலை விபத்தில் உயிரிழந்ததாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (TTFI) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ள 83வது மூத்த தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக குவாஹாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு மூன்று அணி வீரர்களுடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன் மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக அறிவித்துள்ளனர்.
ஷாங்பங்களாவில் உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு, எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர், சாலை டிவைடரை தாண்டி வந்து டாக்ஸிமீது மோதியதில் கார் பள்ளத்தாக்கில் விழுந்தது" என்று TTFI வெளியீடு கூறியது.
டாக்ஸி டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், விஷ்வா இறந்துவிட்டதாக வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம் அறிவித்தது. விஷ்வா மற்றும் அவரது மூன்று அணியினர் மேகாலயா அரசின் உதவியுடன் குழு அமைப்பாளர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பல தேசிய தரவரிசைப் பட்டங்கள் மற்றும் சர்வதேசப் பதக்கங்களைப் பெற்ற இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரரான விஷ்வா, ஏப்ரல் 27 முதல் ஆஸ்திரியாவின் லின்ஸில் நடைபெறும் WTT இளைஞர் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட இருந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள கிருஷ்ணசாமி TT கிளப்பில் பயிற்சி பெற்றவர் விஷ்வா.
அவரது மறைவுக்கு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இரங்கல் செய்தியில்..
"83வது சீனியர் நேஷனல் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஷில்லாங்கிற்கு செல்லும் வழியில் ரிபோய் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்தார் என்பதை அறிந்து வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
விஸ்வா தீனதயாளனின் தந்தை மற்றும் குடும்பத்தினர் இன்று இரவு கவுகாத்தி வரவுள்ளனர், விஷ்வாவின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு நாளை காலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அனைத்து சம்பிரதாயங்களையும் முடிப்பதை உறுதி செய்வதற்காக MTTA இன் இரண்டு உறுப்பினர்கள் நோங்போவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.