ஈக்கள் மொய்க்கும் வடை, பஜ்ஜி, உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை, உரிமமும் ரத்து - தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!

கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்க்கும் வண்ணம் திறந்த நிலையில் விற்பனை செய்வதுடன், மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில், பஜ்ஜி, வடை, போண்டா உள்ளிட்ட உணவு பொருட்களை, பொதுமக்களுக்கு, செய்தித்தாள்களில் வைத்து கடைக்காரர்கள் வழங்கி வருகின்றனர். செய்தித்தாள்களில் உள்ள ரசாயனம், உணவு மற்றும் உணவு பொருட்களில் கலந்து, பொதுமக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது போன்ற  சுகாதாரமற்ற நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

"தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, உணவு வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது, வணிகர்களுக்கெதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது. 

இந்நிலையில், வடைக் கடைகள், தேநீர்கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை ஈக்கள் மொய்க்கும் வண்ணமும், தூசிகள் படியுமாறும் திறந்த நிலையில் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையின் தொடர் ஆய்வின் மூலம் அறியப்படுகின்றது. 

மேலும், அக்கடைகளில் பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துவதும், அடுப்பில் சூடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எண்ணெயுடன் புதிய சமையல் எண்ணெயை சேர்ப்பதும் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வணிகர்கள் மேற்கூறிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு அச்சிட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், குளுளுயுஐ-ல் அனுமதிக்கப்படாத உணவுத் தரமற்ற பிளாஸ்டிக்கை உணவுப் பொருட்களை பரிமாறப் பயன்படுத்துவதும் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிப்பதாகும். 

அதாவது, ஈக்கள் மொய்க்கும் வண்ணமும், தூசிகள் படியுமாறும் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் உண்பதால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படவும், பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு இரத்தக்கொதிப்பு, இரத்தநாள அடைப்பு உள்ளிட்ட தொற்றா நோய்கள் ஏற்படவும், அச்சிட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, வணிகர்கள் பின்வரும் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்படுகின்றது. 

உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்: 

1. வடை, பஜ்ஜி, முட்டைக்கோஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மூடி உள்ள கண்ணாடிப் பெட்டியினுள் வைத்துதான் விற்பனை செய்ய வேண்டும்.

2. மேற்கூறிய உணவுப் பொருட்களை, கண்ணாடிப் பெட்டியினுள் தட்டுகளில் வைத்திருக்கும் போது, அச்சிட்ட நியூஸ் பேப்பர் போன்ற காகிதங்களை தட்டுகளில் விரிக்கக்கூடாது. மாறாக, வாழை இலை அல்லது பார்ச்மெண்ட் பேப்பர் அல்லது அச்சிடாத வெள்ளை பேப்பரை விரித்து அதில் தான் உணவுப் பொருட்களை வைத்திருக்க வேண்டும். 

3.பொதுமக்களுக்கு வடை, பஜ்ஜி, முட்டைக்கோஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கடைகளிலேயே சாப்பிடுவதற்கு அச்சிட்ட நியூஸ் பேப்பர் போன்ற காகிதங்களில் அல்லாமல், வாழை இலை அல்லது பார்ச்மெண்ட் பேப்பர் அல்லது அச்சிடாத வெள்ளை பேப்பர் அல்லது அச்சிடாத பேப்பர் ப்ளேட்டில் தான் பரிமாற வேண்டும்.

4. பொதுமக்களுக்கு வடை, பஜ்ஜி, முட்டைக்கோஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பார்சலில் வழங்குவதற்கும் அச்சிட்ட நியூஸ் பேப்பர் போன்ற காகிதங்களைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, வாழை இலை அல்லது பார்ச்மெண்ட் பேப்பர் அல்லது அச்சிடாத வெள்ளை பேப்பர் அல்லது அச்சிடாத பேப்பர் ப்ளேட்டில் தான் பார்சல் கட்டித் தர வேண்டும்.

5. வணிகர்கள் சமைத்த உணவுப் பொருட்களான வடை, பஜ்ஜி, முட்டைக்கோஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தொடும் முன்னர் கைகளில் கையுறை அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் வெறும் கைகளினால் உணவுப் பொருட்களைத் தொடக்கூடாது. 

6. வணிகர்கள் சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதாவது, சமையல் எண்ணெயை சூடேற்றி உணவுப் பொருட்கள் தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்த பின்னர் கொதிக்க வைத்த சமையல் எண்ணெய் குளிர்ந்துவிட்டால், அதனை திரும்ப பயன்படுத்தக் கூடாது. அதுபோல், எரியும் அடுப்பில் சூடாக அல்லது கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெயுடன் புதிய சமையல் எணணெயை ஊற்றக்கூடாது. 

7.வணிகர்கள் ஒருமுறை மட்டுமே சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார இழப்பினை ஈடுசெய்ய, பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரித்து, FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் தயாரிப்பாளர்களுக்கு விற்றுவிடலாம். 

8. வணிகர்கள் FSSAI-ல் அனுமதிக்கப்பட்ட உணவுத் தரத்தில் உள்ள பிளாஸ்டிக்கை மட்டும்தான் உணவுப் பொருனை பரிமாறவும், பார்சல் கட்டவும் பயன்படுத்த வேண்டும். மேலும், எக்காரணம் கொண்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட "ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை” எந்தவொரு வணிகரும் பயன்படுத்தக்கூடாது. 

எனவே, உணவு வணிக உரிமையாளர்கள் மேற்கூறிய உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தவறும்பட்சத்தில், எந்தவொரு முன்னறிவிப்பின்றி பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன், வணிகர்களது விதிமீறல்களுக்கேற்ப உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரால் அபராதம் விதிக்கவோ அல்லது மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் வழக்கு பதிவு செய்யவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. 

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும், அவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post