தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 4 நாட்களாக விமர்சையாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை வைகை ஆற்றங்கரையில் இருந்து திருமஞ்சன நீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு மாவிளக்கு பூஜையும், சனிக்கிழமை பெண்கள் பொங்கல் வைத்தும் கொண்டாடினார்கள் அதனையடுத்து பக்தர்கள் தீச்சட்டி, காவடி , பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காளி அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் வலம் வந்து மறுநாள் அதிகாலை கோவிலை அடைந்தது. அப்போது நகர் முழுவதும் பக்தர்கள் இரவில் விழித்திருந்து அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் காந்திமதிநாதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.