வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா நேற்று குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் அளிக்கும் புகார்களை பொறுமையாக கேட்டு அதற்கு நல்ல தீர்வு காண வேண்டும், பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் குடியாத்தம் டவுன், தாலுகா போலீஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாதி, இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, லட்சுமி, கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறியதாவது:-
மன அழுத்தத்தை போக்க பயிற்சி பெண்கள் தைரியமாக புகார் அளிக்க அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தைரியமாக புகார் அளிக்க அனைத்து மகளிர் நிலையத்துக்கு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தீர்வு கிடைக்கிறது. புகார் அளிக்க வருபவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்தான். மன அழுத்தம் குறைய காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடுகளில் மனம்விட்டு பேசுவது குறைந்து விட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை என்ற தவறான முடிவு வரை செல்கிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.