பிரதமர், நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசிய தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் கைது


தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில், ஹிஜாப் தடை விவகார தீர்ப்பை கண்டித்து, நடந்த ஆர்பாட்டத்தில், பிரதமர் மோடி, நீதிபதிகள் குறித்து அவதுாறாக பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை போலீசார் கைது செய்தனர்.

ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலியை சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி,43, ஹிஜாப் குறித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடகா ஐகோர்ட் நீதிபதிகள் குறித்து அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை துாக்கிலிட வேண்டும், மத கலவரத்தை துாண்டு விதமாகவும் பேசினார்.

இது தொடர்பாக ஏரிப்புறக்கரை வி.ஏ.ஓ. கெளரிசங்கர் அதிராம்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு, தஞ்சாவூர் நோக்கி வந்த ஜமால் முகமது உஸமானியை நேற்று இரவு போலீசார், வல்லம் சாலையில் சுற்றி வளைத்தனர். பின்னர், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜமால் முகமது உஸ்மானியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Previous Post Next Post