கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுத் துவக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் பொறியியல் இறுதியாண்டு பயிலும்  மாணவ மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த ஒருங்கிணைப்பு மையமாக கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரியை அங்கீகரித்துள்ளது.


இதன் வாயிலாக நேஷனல் பொறியியல் கல்லூரி, இண்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூட் பார்ட்னர்ஷிப் செல் சார்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதியுதவியுடன் ஒரு வார கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று கல்லூரியில் தொடங்கியது. 

கல்லூரி முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகேவல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் வி.சுரேஷ் வரவேற்றார். துணை பேராசிரியர் வி.மணிமாறன் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி குறித்து விளக்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை துணை பேராசிரியை ஜெ.மாரீஸ் பிரீத்தி அறிமுகப்படுத்தினார். 

முன்னாள் மாணவரும், மென்பொருள் பொறியாளருமான ஜேம்ஸ் தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "வகுப்பறைக்கும் பணியிடத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள், திறன்கள் மற்றும் வேலைக்கான சான்று, நடைமுறை அறிவு மற்றும் நேர்காணலுக்கு  தயாராகுதல் போன்றவற்றில் மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொள்வது  மற்றும் மேம்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றி  பேசினார்.

வரும் 23-ம் தேதி வரை சி.எஸ்.சி., ஐ.டி., மற்றும் இ.சி.இ. இறுதியாண்டு  மாணவர்களுக்கும், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இ.இ.இ., மெக்கானிக்கல் மற்றும் சிவில் இறுதியாண்டு மாணவர்களுக்கும் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று, மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், திட்டத் தலைவர் ஆர்.பாண்டியராஜன்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட பொறியியல் இறுதியாண்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.

Previous Post Next Post