தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும்,
அது தொடர்பான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மோ.எல்லாளன் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் இ.கதிரேசன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சீனு சதுரகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாள் எ.பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த 1992-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நடந்த 4 பேர் கொலை வழக்கில், கொலையாளிகள் விடுதலை வழக்கை மீண்டும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிஞ்சாங்குளம் கிராமத்தில் போராளிகள் நினைவு நாளான மார்ச் 14-ம் தேதி, அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றி நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
நீண்ட காலமாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள காந்தாரி அம்மன் சிலையை குறிஞ்சாங்குளம் ஆதிதிராவிட மக்களின் அனுபவத்திலும், பாத்தியத்திலும் இருக்கும் இடத்தில் அரசு சார்பில் சிலையை நிறுவ வேண்டும்.
அங்கு பாதி கட்டிடம் கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ ஆலயத்தை முழுமையாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிஞ்சாங்குளம் கிராம மக்களின் அனுபவத்தில் உள்ள இடத்தை தமிழக அரசு அவர்களின் பயன்பாட்டுக்காக பட்டா வழங்க வேண்டும்.
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை குறிஞ்சாங்குளம் கிராம மக்களின் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, கயத்தார் ஒன்றிய செயலாளர் காளிராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மாதவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் சேகர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.