தரமற்ற சூரிய காந்தி விதைகள் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தபட்ட விதை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சூரியகாந்தி பயிருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு, விவசாய அணி சேதுராஜ், இணை பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகர தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுச்செயலாளர் முனிராஜ், தெற்கு ஒன்றிய தலைவர் அம்மன் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் உமா செல்வி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உத்தண்டுராமன், ஒன்றிய விவசாய அணி தலைவர் ரெங்கசாமி, மாவட்ட மகளிரணி துணை தலைவர் லிங்கேஸ்வரி கருணாநிதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் வழங்கினர். அந்த மனுவில் “100 நாள் பயிரான சூரியகாந்தி பயிர்கள் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிட்டு 75 நாட்கள் ஆகியும் சரியான வளர்ச்சி, பூக்கும் திறன் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சூரியகாந்தி விதை உற்பத்தி செய்த நிறுவனமும், விதை விற்பனை செய்த கடைக்காரர்களும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.