திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திகுறிப்பு : திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் சிரமம் இன்றி செய்யும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 03.03.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை தொடர்ந்து சென்னை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் திருக்கோயிலில் பக்தர்களின் நலன்களை முன்னிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்களுக்காக இத்திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வரும் கட்டண தரிசன வரிசை ரூ.250/ மற்றும் ரூ.20/- ரத்து செய்யப்பட்டு ரூ.100/-கட்டண தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை ஆகிய இரண்டு வரிசை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் திருக்கோயிலின் மகாமண்டபத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, வரிசை முறை மாற்றி அமைக்கப்படவுள்ளது. மகாமண்டபத்தில் இரண்டு வரிசையில் வரும் பக்தர்களும் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து மூலவரை தரிசனம் செய்யும் வகையில் மாற்றம் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
இத்திருக்கோயிலில் கைங்கர்யம் செய்து வரும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் திரிசுதந்திரர்கள் திருக்கோயிலுக்குள் பக்தர்களை தரிசனத்திற்காக அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு திருக்கோயிலில் 125 ஆயுதப்படை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்நடைமுறை நாளை (09.03.2022) முதல் 15 தினங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.