ஒரு பக்கம் ஒட்டு போட்டா , இன்னொரு பக்கம் ஓட்டை விழும் வல்லநாடு மேம்பாலத்தில் இன்று மீண்டும் ஒரு பள்ளம்.! - மீண்டும், மீண்டும் உடையும் தரமற்ற பாலத்தால் பயணிகள் அச்சம் -நிரந்தர தீர்வு எப்போது ?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு ஆற்றுப்பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டு போக்குவரத்து ஆரம்பித்த நான்கு வருடங்களில் உடைந்து பள்ளம் ஏற்பட்டு பெரும் சர்ச்சையான நிலையில், அது பழுது பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் சில மாதங்களில் வேறெரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு ஒட்டு போடப்பட்டு அதுவே தொடர்கதையான நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு முடிவடைந்து, வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இறக்குமதியாகும் பல்லாயிரம் டன் மரத்தடி, முந்திரி, நிலக்கரி, சுன்னாம்புக்கல் ,இரும்பு உள்ளிட்ட பொருட்களை சுமந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி ,கேரளா செல்லும் கனரக வாகனங்கள் உட்பட இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்  சென்று வருகின்றன.

வர்த்தக போக்குவரத்திற்க்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய துளை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய துளைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. பாலம் சேதமடைந்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன. 

இந்நிலையில் வாகனங்கள் சென்றுவரும் இந்த ஒருவழிப் பாதை பகுதியில் கடந்த 2021 நவம்பர் இரண்டாம் தேதி மேலும் ஒரு துளை விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதுவும் இன்னும் சீர் செய்யப்படாத நிலையில் , இன்று மீண்டும் ஒரு புதிய இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இரவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஒரே வழியில் செல்வதால் இரவு நேரங்களில் அதிகம் விபத்து ஏற்படுவதுடன் இரவு நேரத்தில் இந்தப் பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

125 ஆண்டுகள் முன்பு இந்தப் பாலத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள பழமையான மேம்பாலம் சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், அதனருகில் புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

தரமற்ற பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர், தரத்தை , உறுதித் தன்மையை ஆராயாமல் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் ஆகியோர் மீது விசாரனை நடத்தி நடவடிக்கை எடுத்து, மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு பாலத்தை சீரமைப்பதுடன், அதுவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். 



Ahamed

Senior Journalist

Previous Post Next Post