தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தினம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நேற்று (24.03.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிகமான காசநோயாளிகளை கண்டறிந்து அரசிற்கு தெரியப்படுத்தியமைக்காக 10 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள், காசநோய் ஒழிப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த பிற துறையினைச் சேர்ந்த 5 பேருக்கு கேடயம், காசநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் ஒரு நபருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ், காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ துறையை சார்ந்த பணியாளர்கள் 7 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ், 2021-ம் ஆண்டில் காசநோய் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநகர் மைய மருத்துவமனைக்கு சான்றிதழ் மற்றும் கேடயம், சிறந்த அரசு மத்துவமனை காசநோய் பங்களிப்பிற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை, காசநோய் ஒழிப்பில் சிறப்பாக 2021-ல் செயல்பட்ட 12 பேருக்கு பரிசுகள் மற்றும் கேடயம் என மொத்தம் 37 நபர்களுக்கு பரிசுகள், கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ம்ஆண்டில் மட்டும் 16,624 பேருக்கு காசநோய்க்கான சளிப்பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 2068 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் 87 சதவீதத்தினர் பூரண குணம் பெற்றுள்ளனர். காசநோய்க்கான நான்கு மருந்துகளையும் ஒரே மாத்திரை வடிவத்தில் உள்ளடக்கிய எப்.டி.சி என்னும் மாத்திரைகளை கொண்டு டாட்ஸ் எனப்படும் நேரடிப்பார்வையின்; கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சிகிச்சை முறையானது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
டாட்ஸ் முறையில் காசநோய் சிகிச்சையை முழுகால அளவிற்கும் முறையாக எடுத்து கொண்டால் இந்நோயிலிருந்து பூரண குணம் பெறலாம். எச்.ஐ.வியும் காசநோயும் மோசமான இணைத்தொற்றாகும். இவை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயின் தன்மை அதிகரிப்பதையும், இறப்பையும் குறைக்கலாம். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் ஏ.ஆர்.டி மையம் மூலம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் காசநோயால் 38 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும், காசநோயை விரைந்து கண்டறியும் அதி நவீன சிபிநாட் கருவியானது தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் செயல் பட்டு வருகிறது. அதே போல் ட்ரூநாட் கருவியானது மாவட்ட காசநோய் மையத்திலும் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய நாட் பரிசோதனையின் மூலம் காசநோய் அறிகுறியுள்ளவர்கள் தங்களுக்கு காசநோய் உள்ளதா இல்லையா என்பதனை இரண்டு மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம்.
சமீப காலமாக மருந்துக்கு கட்டுப்படாத எம்.டி.ஆர் காசநோயால் நமது சமுதாயம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஆரம்பநிலை காசநோயால் பாதிக்கப்படுவோர், தங்களுக்கான மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாததே எம்.டி.ஆர் காசநோய்க்கு காரணமாக அமைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 48 நபர்கள் எம்.டி.ஆர் காசநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாலும் அவரது வங்கி கணக்கில் ரூ.500, ரூ.1000 வழங்கப்படும். டிபி இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி TKMCH நெஞ்சக மருத்துவ பிரிவு துறை தலைவர் சங்கமித்ரா, துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசம்) சுந்தரலிங்கம், இணை இயக்குநர் நலப்பணிகள் முருகவேல், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரஜேந்திரன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (குடும்பநலம்) பொன் இசக்கி, தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) யமுனா, தூத்துக்குடி மாநகராட்சி மாநகர் நல அலுவலர் அருண்குமார், இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகர், மாவட்ட காசநோய் மையம் மருத்துவ அலுவலர் ஆல்பர் சேக்ரட் செல்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.