சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சோனா கல்வி குழுமம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று பிஎன்ஒய்எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் இளங்கலை 5½ ஆண்டு படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியின் வளாகத்தில் நடைப்பெற்றது. சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திரு.தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.மதன்குமார் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு தலைமை விருந்தினர்களாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முணைவர் ஜகநாதன், சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சேலத்தில் 60 ஆண்டு பராம்பரிய மிக்க எங்களது கல்வி நிறுவனம் தற்போது இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியை தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. சமீபகாலமாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மருத்துவத்துறையில் மாணவர்கள் பல சாதனைகளை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திரு.தியாகுவள்ளியப்பா பேசுகையில் சோனா கல்விக் குழுமம் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, ஜவுளி, கட்டுமானம் போன்றவற்றின் மூலம் சமுதாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் திறன்பட செயல்படுவது போல் இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க இயற்கை மருத்துவ முறையை ஒவ்வொரு குடிமகனும் பயனடைய இந்த சோனா இயற்கை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மருத்துவத் துறையில் இந்திய அளவில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று கூறினார். இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், காதர்நவாஷ், கவிதா பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.
Previous Post Next Post