பவானிசாகர் - மார்ச்.1.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நடக்க முடியாத நிலையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து. அந்த சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
பவானிசாகரில் உள்ள வனத்துறை கால்நடை மருத்துவமனை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு சென்று, அந்த சிறுத்தையை கண்டுபிடித்து அதற்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்பு அதனை ஒரு கூண்டில் ஏற்றி சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன உயிரின மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு வந்தனர். இன்று காலை முதல் மருத்துவ குழுவினர் அந்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்க துவங்கியுள்ளனர். இரண்டு பின்னங்கால்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த, ஐந்து வயதுடைய அந்த ஆண் சிறுத்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூண்டில் உள்ள சிறுத்தைக்கு உணவாக மாட்டு இறைச்சி, அதன் ரத்தம் மற்றும் ஈரல், ஆட்டிரைச்சி, உயிரோடுள்ள கோழி ஆகியவை உணவாக கொடுக்கப்
படுகிறது. மேலும் துப்பாக்கியின் மூலம் மருந்துகள் செலுத்தப்படுகிறது. தற்போது சிறுத்தைக்கு சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும், சிறுத்தை குணமாகி எழுந்து, கால்களை ஊன்றி நடமாடும் வரை தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.