”ஜெயலலிதா சிகிச்சை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது”- விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் பல்டி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆனையத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும்  ஆஜராகாத நிலையில் இன்று காலை அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது” என வாக்குமூலம் அளித்துள்ளார். கூடுதலாக ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட எனக்கு தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது தெரிய வந்ததாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் கூறியுள்ளார்.

விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார் என்ற ஆணையத்தின் கேள்விக்கு, பொது மக்களின் கோரிக்கை அடிப்படையிலேயே அமைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது மட்டுமே தெரியும் என்றும் வேறு என்ன உடல் உபாதைகள் இருந்தது என்றும் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் குற்றம்சாட்டினர், இதன் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post