கோவை ரயில்வே கோட்டம் அமைத்திட ஒன்றுபட்டு வலியுறுத்துவோம் - கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் பேச்சு


கோவை ரயில்வே மண்டலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் என்ற தலைப்பில்  கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் சனியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், 180க்கும் மேற்பட்ட வர்த்தக, தொழில், வல்லுநர்கள் மற்றும் இதர அமைப்பினர் முன்மொழிந்த அறிக்கையின் மீது ஆலோசனை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு  தொழில் வர்த்தக சபையின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.


இதில் பங்கேற்ற பலரும் கோவை கோட்டம் அமைய வேண்டிய அவசியம் குறித்து கருத்துகளை தெரிவித்தனர். இதில், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழித்தடத்தில் ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட ரயிலால், 

கோவையில் இருந்து பழனி, மதுரை பகுதிகளுக்கு காய்கறி கொண்டு செல்லவும், ராமேசுவரம் பகுதிகளில் இருந்து கோவைக்கு கடல் மீன்கள் அதிகளவில் கொண்டு வரவும் ஏதுவாக இருக்கும். எனவே, அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல், கோவையில் இருந்து பழனி, திண்டுக்கல், திருச்சி, 

தஞ்சாவூர் வழித்தடத்தில் காரைக்காலுக்கு ரயில் இயக்க வேண்டும். இதனால், கோவை மக்கள்  திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது எளிதாக இருக்கும் என்றனர். இதனையடுத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில்,

நான் மக்களவை உறுப்பினராக இருந்த கடந்த காலத்திலும் இப்போதும், கடந்த 10 ஆண்டுகளில் கோவை மற்றும் கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில்  11 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

பல இடங்களிள் பாலம் அமைப்பதில் ரயில்வே துறையின் பணிகள் முடிக்கப்பட்டு, மாநில அரசின் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இதேகாலத்தில் திருப்பதி, இராமேஸ்வரம் உள்ளிட்டு புதிதாக கோவைக்கு 8 இரயில்களும், 

கோவை ரயில்நிலையத்திற்கு வராமல போத்தனூர் வழியாக சென்று கொண்டிருந்த 9 ரயில்களை கோவை ரயில்நிலையம் வந்து செல்லும் வகையில் தொடர்ந்து வலியுறுத்தி அதனை நிறைவேற்றி உள்ளோம். இதேபோன்று தண்ணீர் பந்தல் உள்ளிட்ட ரயில்வே கடவுகளில் சுரங்கபாதை (சப்வே) அமைத்திட தொடந்து வலியுறுத்தி வருகிறேன். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே அதிகாரிகளை வரவழைத்து கோவையின் முக்கியமான ரயில்வே இருப்புபாதை கடவுகளை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளேன். 

இந்த ஒவ்வொரு கோரிக்கைகளும் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள், மக்களை திரட்டிய போராட்டங்கள் மூலமாகவே நடந்துள்ளது. இந்தியாவிலேயே வாளையாறு, மேற்கு வங்காளத்தில் தான் ரயில்கள் மோதி யானைகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. 

வாளையாறு வழியாக செல்லும் ரயில்களை, வனப்பகுதிக்குள் செல்கையில் 30 கிலோ மீட்டருக்கு கீழ் இயக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவை பின்பற்றப்படுவதில்லை. மாறாக, வாளையாறு வழியாக பாலக்காடு செல்லும் விரைவு ரயில்களை, 

பொள்ளாச்சி வழித்தடத்தில் மாற்றி இயக்கி  அங்கிருந்து பாலக்காடு செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலமாக 28 நிமிடங்கள் ரயில்கள் தாமதமாகும். ஆயினும், யானைகள் ரயில்களில் அடிபட்டு இறப்பது தவிர்க்கப்படும். தொழில் வர்த்தக சபையின் நிர்வாகிகள் முன்மொழிந்துள்ள செட்டிபாளையத் தில் ரயில் நிலையம் அமைத்தல், 

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரயில்கள் இயக்குவது, கோவை  மேட்டுப்பாளையம் இடையே தினமும் 2 முறை மட்டுமே இயக்கப்படும் ரயிலை 5 முறை இயக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.30 கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கனவே நான் வலியுறுத்தி வருகிற கோரிக்கைகள் தான். 

என்னுடைய கருத்துகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்திய தொழில் வர்த்தகசபை உள்ளிட்ட அமைப்புகள் மேற்கண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளது.  இந்த நியாயமான கோரிக்கைகளை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 

பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கோவை ரயில் நிலையத்திலும் மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. 

எனவே, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு  நிலையங்களை ஒன்றிணைத்து,  கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு கோவை ரயில்வே கோட்டம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு தொழில் அமைப்பினர், மக்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்வேன். 

போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரையில் ரூ.300 கோடி செலவில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவும் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றார்.

முன்னதாக இவ்வமைப்பினர் இனைந்து தயாரித்துள்ள ரயில்வே கோரிக்கைகள் அடங்கிய புத்தகத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் நிர்வாகிகள் வழங்கினர். இந்தக் கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபையின் நிர்வாகிகள், தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக 

கே.நாராயணசாமி சத்தியமங்கலம்

Previous Post Next Post