உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக இளைஞர் : இந்திய ராணுவம் உயரம் குறைவு என நிராகரித்ததால் விபரீத முடிவு.! - பெற்றோர் கவலை.!

கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த 21 வயதான சாய் நிகேஷ் விண்வெளி பொறியியல் மாணவர், இந்திய ராணுவத்தில் சேரும் ஆர்வத்துடன் இரண்டு முறை விண்ணப்பித்தும் உயரம் குறைவு காரணமாக நிராகரிக்கப்பட்ட நிலையில் , திடீரென உக்ரைன் ரானுவத்தில் இனைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 இல் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அவர் இராணுவத்தில் சேர விரும்பினார், ஆனால் உயரம் குறைவு காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை, இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை அணுகி, அமெரிக்க ராணுவத்தில் சேர வாய்ப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றதாக அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் பிரபல ஆங்கில பத்திரிகையிடம் கூறினார். 

இதனையடுத்து தன்னால் ராணுவத்தில் சேர முடியாது என்பதை உணர்ந்த அவர், 2018-ல் உக்ரைனில் உள்ள விண்வெளி பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவராக சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் ஒரு வீடியோ கேம் மேம்பாட்டு நிறுவனத்தில் பகுதி நேர வேலை கிடைத்ததாக நண்பர்களிம் கூறியுள்ளார். “யுத்தம் வெடித்தபோது, ​​நான்கு நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார். அப்போதுதான் தமிழக இளைஞர் ஒருவர் உக்ரைன் படையில் சேரும் செய்தியைப் பார்த்தோம், நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்” என்று குடும்ப நண்பர் கூறினார்.

இதனையடுத்து கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்ற  உளவுத்துறையினர் அவரது பெற்றோரை சந்தித்தனர்.  உக்ரைனுக்காக ஆயுதம் ஏந்துவதற்கான அவரது முடிவிற்கான அவரது குடும்பப் பின்னணி, நடத்தை மற்றும் சாத்தியமான காரணத்தை கேட்டறிந்த அவர்கள் , சாய் நிகேஷ் இப்போது உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராக ஜார்ஜிய தேசிய படையணி துணை ராணுவப் பிரிவின் ஒரு பகுதியாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய ஒரு படைப்பிரிவில் இருப்பதாக மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு உளவுத்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிற்குத் திரும்பும்படி மன்றாடி கேட்டும் அவர் திரும்பி வர   மறுத்துவிட்டதால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

-அஹமத்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post