தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டலத் தலைவர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த 2பேர் தேர்வு செய்யப்படவில்லை. தெற்கு மண்டலத்தில் தலைமை அறிவித்த சுயம்பு என்பவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதுபோல் மேற்கு மண்டலத்தில் கனகராஜ் என்பவர் மண்டல தலைவராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் போட்டியில் இருந்து விலகியதால் 42வது வார்டு கவுன்சிலர் அன்னலட்சுமி கோட்டுராஜா மேற்கு மண்டல தலைவராக அறிவிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல தலைவருக்கான தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ்
அதில் தூத்துக்குடி வடக்கு மண்டல தலைவராக, திமுக தலைமை அறிவித்த, 7 வது வார்டில் போட்டியிட்டு வென்ற நிர்மல் ராஜ் வடக்கு மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி
தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி
தெற்கு மண்டல தலைவர் பதவிக்கு தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான 56வது வார்டில் போட்டியிட்டு வென்ற சுயம்பு என்பவரை எதிர்த்து 60 வது வார்டில் போட்டியிட்டு வென்ற பாலகுருசாமி போட்டியிட்டார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த திமுகவினர் தலைமை அறிவித்த சுயம்புவை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த மண்டலத்திற்கு உட்பட்ட 15 கவுன்சிலர்களும் மாமன்ற கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவில் வக்கீல் பாலகுருசாமி 9 ஓட்டுகளும், சுயம்பு 2 ஓட்டுகளும் எடுத்து பாலகுருசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட 4 மண்டல தலைவர்களும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மண்டல தலைவர்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், துணைச் செயலாளர் சின்னத்துரை, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, அவைத்தலைவர் செல்வராஜ்.
மாநகர இளைஞரணி துணை செயலாளர்கள் செல்வின், அருண்சுந்தர், மாநகர தொண்டரணி செயலாளர் முருக இசக்கி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ். மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பல்வேறு குழு தலைவர்கள் உறுப்பினர்கள் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட உள்ளனர்.