தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகத்தின் சகோதரி மகன், அண்ணா பிரகாஷ் கவுன்சிலர் தகுதியை இழந்ததாக மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 16-வது வார்டில் மீண்டும் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர் அண்ணா பிரகாஷ் |
கவுன்சிலராக போட்டியிடக் கூடியவர்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்கக்கூடாது. மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது. இந்நிலையில் அண்ணா பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத், அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அதனை அவர் மறைத்து மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி கமிஷனருமான சரவணக்குமார் அண்ணா பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார் |
ஆனால் அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால் அண்ணா பிரகாஷ் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியினை இழந்து விட்டதாக கூறி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகத்தின் சகோதரி மகன், அண்ணா பிரகாஷ். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்தார். இந்நிலையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ஒருவர் தன் பதவியை இழந்திருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் அக்டோபரில் தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராகப் பொறுப்பேற்ற 60 நாள்களில் நகரின் மையப்பகுதியில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்புடைய முக்கிய இடங்களை பல்வேறு எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தி அதிரடிகாட்டியிருக்கிறார் கமிஷனர் சரவணக்குமார்.
தஞ்சையின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில், முன்னாள் திமுக கவுன்சிலரான ஆர்.கே.நாகராஜன் என்பவர் எலைட் டாஸ்மாக்கும், பாரும் நடத்திவந்தார். கலை, நாடகம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் கூடாரமாக அதை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விதியை மீறி வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கமிஷனர் சரவணக்குமார் சுதர்சன சபாவுக்குள் விதியை மீறி மது விற்பதை அறிந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கச் சென்றார். அப்போது நாகராஜன், நேரடியாகவே மிரட்டினாராம். ஆனால், அதைக் காதில் வாங்காத கமிஷனர் சீல் வைக்க, நாகராஜன், `கதவ சாத்துங்கடா, சீல உடைங்கடானு’ கத்தினார். அதன் பிறகு நாகராஜன் மீது போலீஸ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இப்படி எதற்கும் வளைந்து கொடுக்காத ஆனையரின் அதிரடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் , திமுகவினர் மத்தியில் சற்று கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.