தூத்துக்குடியில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்திருப்போா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்..
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சீா்மிகு நகர திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி) கீழ் சாலைகள், தெருவிளக்குகள் வணிக வளாகங்கள், பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் , பூங்கா அபிவிருத்திப் பணிகள், மழைநீா் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டு தற்போது பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன.
குறிப்பாக, சாலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், போக்குவரத்து இடையூறின்றி செல்வதற்கும் ஏதுவாக சாலைகளில் ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களை தனிப்பட்ட நபா்கள் ஆக்கிரமித்து, தற்காலிக மற்றும் நிரந்தர தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றனா். எனவே அதை ஒழுங்குபடுத்தும் விதமாக மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் நிலையில் மாநகராட்சி சாா்பில் வாரத்தில் புதன்கிழமைதோறும் நடைபெற உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குரிய செலவினங்களை ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து வசூலிப்பதுடன், மாநகராட்சி சட்டம் பிரிவு 256 மற்றும் 258 இன் படி தொடா்புடைய நபா்கள் மீது நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமுறை மீறல்: இதேபோல, மாநகரப் பகுதிகளில் கட்டடம் கட்டுவோா் மாநகராட்சியை அணுகி கட்டட அனுமதி முறையாகப் பெற வேண்டும். அனுமதி பெறாத மற்றும் அனுமதிக்கு முரணாக கட்டப்படும் கட்டடங்களின் உரிமையாளா்கள் மீது மாநகராட்சி சட்டப்பிரிவு எண் 296 (1),(2),(3) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நகா் ஊரமைப்பு சட்டம் 56 மற்றும் 57-இன் படி விதிமுறை மீறிய கட்டடங்கள் மாநகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளார்.