'வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளையின் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருதை (Boundaries: Human-Tiger Conflict) என்ற புகைப்படத்திற்காக வென்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன்!
பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருதை தென்னிந்தியர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை!
மனித-புலி மோதலின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் கடந்த பத்து ஆண்டுகளாக பாதுகாவலர்கள், வன அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராமவாசிகளுடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா என ஒவ்வொரு பிராந்தியத்திலும், அந்த பிராந்தியத்தைச் சேர்ந்த அல்லது தீவிரமாகப் பணிபுரியும் நிபுணர்களைக் கொண்ட பிராந்திய நடுவர் குழுவால் குறிப்பிட்ட வகைக்கான உள்ளீடுகளின் அடிப்படையில் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிராந்திய நடுவர்கள் முடிவெடுத்தவுடன், உலகளாவிய நடுவர் குழு 24 பிராந்திய வெற்றியாளர்களையும் அவர்களில் இருந்து நான்கு உலகளாவிய வெற்றியாளர்களையும் முடிவு செய்தது
இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படம், இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படக் கதை, உலக பத்திரிகை புகைப்பட நீண்ட கால திட்ட விருது மற்றும் World Press Photo Open Format விருது ஆகும். அந்த உலகளாவிய வெற்றியாளர்கள் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.
போட்டியின் ஒவ்வொரு பிராந்திய வெற்றியாளரும் €1,000 யூரோ பணப் பரிசைப் பெறுகிறார்கள், வெற்றியாளர்களின் புகைப்படங்களை வருடாந்திர உலகளாவிய கண்காட்சியில் சேர்த்தல், வருடாந்திர வருட புத்தகத்தில் சேர்த்தல், வெளியீடு மற்றும் உலக பத்திரிகை புகைப்பட இணையதளத்தில் அவருடைய தனிப்பட்ட சுயவிவரம், வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ தளங்களில் விளம்பரம், மற்றும் வெற்றியாளர் நேரில் அழைக்கப்பட்டு விருது ஆகியவைகளை பெறுவர்.
விருது வென்றது குறித்து செந்தில்குமார் பேசும்போது,
“புகைப்படங்கள் என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், நம் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொருளாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்பதால் புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் சூழலை புகைப்படங்களாக காட்சிப்படுத்தினேன். நாம் செய்ய முடியாததை புகைப்படங்கள் செய்து விடும். புகைபப்படங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தூண்டுதலாக அமையவேண்டும். புகைப்படங்கள் ஆயுதமாக குரலாக இருக்க வேண்டும். நான் புகைப்படத்தை ஆயுதமாகவே பயன்படுத்தினேன். ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உள்ள இந்த சர்வதேச விருதை பெற்றதில் மகிழ்ச்சி ”என்று செந்தில்குமார் கூறினார்.
புகைப்படத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள செந்தில்குமரன் தற்போது உலக அளவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சாதனை படைத்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரையின் சிறந்த கலைஞர்களில் ஒருவரும் அன்பு நண்பருமான செந்தில்குமார் அவர்கள் உலகப் புகழ்பெற்ற World Press Photo Awards விருதிற்கு ஆசியக் கண்டத்தின் சார்பில் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. எனவும் பல்லுயிர் காப்பில் முனைப்போடு செயலாற்றி கடந்த பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த அவரது பணிக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் இது” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.