"தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் விரைவில் முதல் இடம் பிடிக்கும் " - தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் விரைவில் முதல் இடம் பிடிக்க போகிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. மொத்தம் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த பூங்கா மூலம் 3½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச தரத்தில் அமையும் இந்த பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெற்றது. 


விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது: தி.மு.க. ஆட்சி அமைந்து 10 மாதங்கள் முடிந்து 11-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் தூத்துக்குடியில் புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க. அரசு அமைந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், சொல்லப்போனால் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே அரசு பணியை நாங்கள் தொடங்கி உள்ளோம்.


நாள் தோறும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கிறோம். ஏதாவது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கக்கூடிய ஏதாவது ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி வைத்துக்கொண்டு இருக்கிறோம்.


மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற எங்களை ஆளாக்கிய அண்ணா சொன்ன தாரகமந்திரத்தை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். இதேபோல் அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களையும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அதேபோல் நடந்திட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கொண்டு இருக்கிறோம்.


நேற்று முன்தினம் தமிழக அமைச்சர்கள் கூட்டத்தை நாங்கள் கூட்டினோம். விரைவில் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளோம். அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமுதாய பிரதிநிதிகளிடம் நிதிநிலை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.


அதன்பின்னர் அதனை நிறைவேற்றும் வகையில் ஈடுபட்டுள்ளோம். இப்படி மக்கள் நல அரசாக, அனைவரையும் அனுசரித்து செல்லும் அரசாக என்னுடைய அரசு என்று சொல்ல மாட்டேன். நம்முடைய அரசு என்று சொல்லி கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான் தூத்துக்குடி வந்துள்ளேன். இங்கு சர்வதேச தரத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் பர்னிச்சர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட உள்ள பூங்கா இங்குதான் அமைய உள்ளது என்ற பெருமையை தூத்துக்குடி பெற்று உள்ளது.

இந்திய விடுதலை வேட்கையை முதலில் ஏற்படுத்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் இந்த சர்வதேச பூங்கா அமைய போகிறது. சொந்த தேசத்தில், சொந்த பணத்தில், சுயசார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும் என கனவு கண்டவர் தான் வ.உ.சிதம்பரனார். அவரது பொருளாதார கனவு நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்துள்ளது. நீர்வளம் நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழரின் ஆட்சி, நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் நிலமாகவும் இந்த தூத்துக்குடி விளங்கி கொண்டிருக்கிறது.

முத்துகுளிப்பதற்கு பெயர் பெற்றதால் தான் தூத்துக்குடியை முத்துநகர் என்று அழைக்கின்றோம். இந்த முத்துநகரை தான் கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிராமம் நகரமாகவும், நகரம் மாநகரமாகவும் மாற வேண்டும் என்பது தான் தி.மு.க. அரசின் கொள்கை. அதன் அடிப்படையில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலும், இந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அமைய உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் தமிழகத்தில் 2-வது பெரிய துறைமுகம். இந்திய அளவில் 3-வது பெரிய துறைமுகம் ஆகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கப்பல்களுக்கும் தூத்துக்குடி துறைமுகம்தான் நுழைவு வாயில். அதனால் தான் இங்கு பர்னிச்சர் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளோம்.

திராவிட மாடலை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறுகிய கால நல்வினைக்காக அல்ல. தமிழகத்தில் உள்ள மகத்தான வளங்களை பயன்படுத்தி நிகழ்காலம் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற லட்சியத்தில் நாம் உழைத்து கொண்டு இருக்கிறோம். சென்னை, கோவை ஆகிய இடங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. தற்போது 109 திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.56,229 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நமது நோக்கம். தென்மாவட்டத்தை தொழில்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் விரைவில் அமைக்கப்படும். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் 150 ஏக்கரில் உணவு பூங்கா சிப்காட் மூலமாக அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் சார்பில் 1,000 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இதுவரை ரூ.4,500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 என்ற நிலையை அடைய போகிறது. சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தொழில் பூங்காக்களில் முன்னிலை வகிக்கின்றன. இதில் இந்தியா பின்னடைந்துள்ளது. இதனால் உலக தரத்திற்கு இணையாக தூத்துக்குடியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 1,150 ஏக்கரில் பர்னிச்சர் தயாரிப்பு பூங்கா அமைக் கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Previous Post Next Post