பல கோடி ஊழல் -தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது.!

 

என்.எஸ்.இ. என அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டு பல கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பே, என்எஸ்இ சர்வர்களை வைத்திருக்கும் கோ-லொகேஷனில் இருந்து  சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் பார்த்திருக்கலாம் என்று செபி குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.  

இதன் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் கடந்த மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சித்ரா ராமகிருஷ்ணா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க  சிபிஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த கோ-லொகேஷன் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஆனந்த் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தியநிலையில் கடந்த மாதம் அவரை கைதுசெய்து டெல்லி அழைத்துச் சென்றனர். சிபிஐ நீதிமன்றத்தில் ஆனந்த் சுப்பிரமணியத்தை ஆஜர்படுத்திய நிலையில் அவரை மார்ச் 6ம் தேதிவரை காவலில்எடுத்து விசாரிக்கசிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 இதற்கிடையே, சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை  விசாரித்த நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லியில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post