தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணிணிப் பயிற்சி : கூடுதல் ஆட்சியர் துவக்கி வைத்தார்!


தூத்துக்குடியில் அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவ மாணவியர்களுக்கு எண்ம முறையில் கணிணிப் பயிற்சியினை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன்,  துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் எண்ம முறையிலான கணிணிப் பயிற்சியினை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன்,  இன்று (28.03.2022) துவக்கி வைத்து தெரிவித்ததாவது, இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கணினியின் பங்கு எல்லா துறைகளிலும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது . கல்வி, மருத்துவம், போக்குவரத்து மற்றும் நமது அன்றாட பயன்பாடுகளில் கணினி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. 


நமது மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கிற மாணவ மாணவியர்களும் கணினிகளை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெறவேண்டும். அதன் வழியாக வருங்காலத்தில் மிகச்சிறந்த தொழில் முனைவோர்களாகவும், பெருமைக்குரிய வேலை வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 72 ஆண்டுகளாக கல்வியை சேவையாக மட்டுமே செய்து வரும் நமது தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுயதொழில் மற்றும் திறன் வளர்ப்பு மையமும், 

தூத்துக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைந்து வரும் கல்வியாண்டு முதல் மாதத்துக்கு இரண்டு அரசு பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 1200 மாணவர்கள் பயனடையும் வண்ணம் எண்ம முறையிலான கணிணிப்பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டு பத்து நாள் தொழில்நுட்ப திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பத்து நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பில்  தூத்துக்குடி கல்வி மாவட்டத்தைச் சார்ந்த சி.வா. அரசுமேல்  நிலைப்பள்ளி, சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி,   சாமுவேல்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 30 மாணவ-மாணவியர்கள் பங்கு பெறுகின்றனர்.

இத்திட்டத்தினால் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பள்ளியில் படிக்கும்போதே கணினி அறிவை பெறவும், அதன் மென்பொருள்களை பயன்படுத்தும் திறன்களில் வளர்ச்சி பெறவும் இயலும். எதிர்காலத்தில் கணினி தொழில்நுட்பமே எல்லாவற்றிலும் மேலோங்கி நிற்கும் என்பதால் இந்த திறன்களை பள்ளி பருவத்திலேயே கற்று தேறும் மாணவ மாணவியர்கள் தங்களின் திறமைகேற்ற துறையை தேர்ந்தெடுத்து அதில் தொழில் முனைவோர்களாக மலரவும், பிற வேலைவாய்ப்புகளை பெறவும் இயலும் என்கிற தொலைநோக்கோடு இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்  ம.செல்வம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  பாலதண்டாயுதபாணி, வ.உ. சிதம்பரம் கல்லூரியின் செயலர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம், கல்லூரியின் முதல்வர் சொ.வீரபாகு, திருச்சி பாரதிதாசன் சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு மையத்தின் இயக்குனர் ராம் கணேஷ், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post