விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதி தாசில்தாராகப் பணியாற்றிவந்தவர் சுந்தரமூர்த்தி. கடந்த ஆண்டு, விருதுநகரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியபோது துலுக்கப்பட்டியிலுள்ள அரசு சிப்காட் நிலத்தைத் தனியாருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, இவர்மீது லஞ்சப் புகார்கள் வந்து குவியத் தொடங்கின. இந்தப் தொடர் புகார்கள் காரணமாக, உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். அவர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தியைக் கண்காணித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தாசில்தார் சுந்தரமூர்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தைத் தனியாருக்குப் பட்டா செய்துகொடுத்தது உறுதியானது. அதையடுத்து, அதிகாரிகள் இது தொடர்பாக அறிக்கை தயாரித்து மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, தாசில்தார் சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.