ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் - இந்திய வீரர் லக்சயா சென், நடப்பு சாம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் சாதிக்க தவறிய நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இளம்வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்தத் தொடரில்  தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள லக்சயா சென் நேற்று நடக்கவிருந்த காலிறுதி போட்டியில் சீனாவின் லு குவாங் ஷு-வை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால், லு குவாங் ஷு போட்டியில் இருந்து விலகிய காரணத்தால், லக்சயா சென் போட்டியிடாமலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதனிடையே, நேற்று 19 மார்ச் இரவு பர்மிங்ஹாம் நகரில் நடந்த அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் (21-13) லக்சயாவும், இரண்டாவது செட்டில் 12-21 லீ ஜியாவும் வென்றனர். போட்டியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் லீ ஜியா வலுவான நிலையில் இருந்தாலும், கடைசி கட்டத்தில் லக்சயா சென்  21-19 என்ற புள்ளிகளுடன் போட்டியில் வெற்றிகண்டார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு சாய்னா நேவால் ஆல் இங்கிலாந்து தொடரில் இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். அவருக்கு பிறகு இந்த ஏழு ஆண்டுகளில் பர்மிங்காமில் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை இன்றைய வெற்றியின் மூலம் லக்சயா சென் பெற்றுள்ளார்.

ஆல் இங்கிலாந்து பைனலில் பிரகாஷ் படுகோனே மற்றும் புல்லேலா கோபிசந்த் என்ற இரண்டு இந்தியர்கள் மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளனர். லக்சயா சென் அந்தப் பட்டியலில் நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விக்டர் ஆக்சல் மற்றும் சௌ தியென் இடையே நடைபெறும் இரண்டாவது அரையிறுதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் நபருடன் லக்சயா சென் இறுதிப் போட்டியில் மோதுவார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post