ஆண்டிபட்டி,மார்ச். 21
உலக வன நாளை ஒட்டி ஆண்டிபட்டி தனியார் பள்ளி சிறுவர்களின் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது .
ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் துவக்கிவைத்தார்.
பேரணி பள்ளியில் இருந்து துவங்கி தேனி சாலை வழியாக வந்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் முடிவடைந்தது.
அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் யாழிசைச்செல்வன், சவுரியம்மாள் , ஆண்டிபட்டி பேரூராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் ஒழிப்பு குறித்தும் , மழைநீர் உயிர்நீர் என்பது குறித்தும் , மழைப்பொழிவு பெற வனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும்,விளக்கி பேசினார்கள்.
மேலும் பிளாஸ்டிக் பாலிதீன் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன . இதையடுத்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ஆண்டிபட்டி நகரின் முக்கியவீதிகள் வழியாகச்சென்று வைகைஅணை சாலைப்பிரிவில் முடிவடைந்தது .
ஊர்வலத்தில் வந்த மாணவ மாணவியர்கள் வனவளங்களைக் காப்பதின் அவசியம் குறித்தும் , பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு குறித்தும் கோஷங்களை எழுப்பியபடி வந்தனர் . கடும்வெயிலையும் பொருட்படுத்தாது உலக வனநாளையொட்டி ஆண்டிபட்டி பள்ளி மாணவர்கள் மேற்கண்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரச்சாரம் பார்ப்பவர் அனைவரையும் கவர்ந்தது .