தூத்துக்குடியில் அறிவியல் பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்காவை உள்ளிட்டவைகளை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தமிழ்ச்சாலை பகுதியில் ரூ.57.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா, கோளரங்கம் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
பூங்காவை பார்வையிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் போக்குவரத்து பூங்கா, அறிவியல் பூங்கா, மானுடவியல் பூங்கா மற்றும் கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறியீடு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அறிவியல் பூங்காவில், கோளரங்கம் 4-டி காணொலி காட்சி, 5.1 ஆடியோ மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மானுடவியல் பூங்காவில் இந்தியாவில் வாழ்ந்த 12 பூர்வகுடி இன மக்களின் கலாச்சாரம், தொழில்,வாழ்வியல் முறைகளும், ஐந்திணை நிலஅமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக பார்வையிட்டு கண்டு களித்தனர்.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றனர். மேலும் பூங்காக்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மாணவ மாணவியருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், சேகர், பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன்,
ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடியில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணா நகர் மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்தும்,
வாகனங்களை அவற்றை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தச்செய்வது குறித்தும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.