திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிகம்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் தனது தொழில்விரிவுபடுத்துவதற்காக, பலபேரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இவருக்குதொழிலில் பெருநஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜபாண்டியால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அவருக்கு பணம் கொடுத்தவர்கள் ராஜபாண்டி வீட்டுக்கு வந்து அவ்வப்போது பணம் கேட்டு பிரச்னை செய்து வந்தனர்.
கடந்த, ஒரு ஆண்டுக்கு முன்பு, திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த ராமர் என்பவரிடம், 2 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாயை ராஜபாண்டி கடனாக பெற்றிருக்கிறார். கடந்த, 9ம் தேதி வீட்டுக்கு சென்ற ராமர் பணத்தை கேட்டு சத்தம் போட்டுள்ளார். இந்த நெருக்கடியால், மனமுடைந்த ராஜபாண்டி மற்றும் அவரது தாயார் புஷ்பம், 58 ஆகியோர் எலி ‘பேஸ்ட்’ எனும் விஷமருந்தை சாப்பிட்டனர். இதில் துடிதுடித்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த புஷ்பம் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார், பணம் கேட்டு மிரட்டி, தற்கொலைக்கு துாண்டியதாக ராமர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.