சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகள் இருவர் கைது - தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாலாஜி சரவணன் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி பவானி (62) என்பவர் 24.03.2022 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து துணியால் கழுத்தை இறுக்கி,
கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த ரூபாய் 15,000/- மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு,
காவலர்கள் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தனிப்படையினர் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொழில் நுட்ப ரீதியாகவும் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்
தூத்துக்குடி எட்டயாபுரம் ரோடு, ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மகன் நவநீதகிருஷ்ணன் (25) மற்றும் முத்தம்மாள் காலணியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சதீஷ் கண்ணன் (26) என்பதும், அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சம்பவ இடத்தில் பெருமளவு பணம் மற்றும் ரொக்கம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கொலையுண்ட பவானி வீட்டிற்குச் சென்று,
அவரை துணியால் கழுத்தை நெறித்து, கட்டையால் தாக்கிவிட்டு அங்குள்ள பீரோ மற்றும் பொருட்கள் வைத்திருக்கக்கூடிய இடங்களில் ஏதாவது கிடைக்கும் என்று தேடியுள்ளனர், எதவும் கிடைக்காததால் கொலையுண்ட பவானி அணிந்திருந்த ரூபாய் 15,000/- மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் பறித்துச் சென்ற தங்க கம்மலையும், எதிரிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும், தீவிர விசாரணை மேற்கொண்டும் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டது யார் என்பதை துப்பு துலக்கி அவர்களை விரைந்து கைது செய்து, அவர்களிடமிருந்து பறித்துச் சென்ற தங்க கம்மல் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.