தூத்துக்குடி :காசநோய் பரிசோதனை - சிபி நாட், ட்ரூ நாட் கருவி மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் முடிவு.! - உலக காச நோய் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தகவல்.!

தூத்துக்குடி மாவட்ட மற்றும் தாலுகா தலைமையிட மருத்துவமணைகளில் செயல்பட்டு வரும் சிபிநாட், மற்றும் ட்ரூநாட் கருவிமூலம் காசநோய் அறிகுறியுள்ளவர்கள் தங்களுக்கு காசநோய் உள்ளதா இல்லையா என்பதனை இரண்டு மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம். எனவே தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என உலக காச நோய் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

4,000ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்களிடம் காணக்கூடிய கிருமி மைக்ரோபாக்டீரியம் டியூபர்கலோசிஸ். எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் முதுகெலும்புத் தொடரை ஆராய்ந்தபோது அதில் டி.பி. கிருமி இருந்திருக்கிறது. பொதுவாக ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் டி.பி. கிருமி எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கிருமி நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

நாளை மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் உலக காச நோய் தினம் கொண்டாடப்படுகிறது.

நாளை உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

உலகளவில் அதிகளவு காசநோய் பாதிப்புள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியாவில் கிட்டதட்ட 35 முதல் 40 கோடி மக்கள் வெளியே தெரியாத மறைமுக காசநோயின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 இலட்சம் பேர் ஆண்டு தோறும் புதிய காசநோயாளியாக உருவாகின்றனர். 2025ம் ஆண்டிற்குள் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்கிற நோக்கில் சமீப ஆண்டுகளாக தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டமானது சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசநோய் வராமல் தடுப்பதற்கான புதிய சிகிச்சை முறையும் எதிர் வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டமானது புதிய யுக்திகளுடன் தேசிய தேசிய காசநோய் ஒழிப்பு திட்டமாக மறுவடிவம் பெற்றுள்ளது. இத்திட்டமானது நோயாளியை மையமாக கொண்டு செயல்படுவதோடு இலக்குடன் கூடிய நோயாளி நலன் சார்ந்த சேவைகளை வழங்குகிறது. 

கடந்த 2021ம்ஆண்டில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 16,624 பேருக்கு காசநோய்க்கான சளிப்பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 2068 பேருக்கு காச நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் 87 சதவீதத்தினர் பூரண குணம் பெற்றுள்ளனர்.

காசநோய்க்கான நான்கு மருந்துகளையும் ஒரே மாத்திரை வடிவத்தில் உள்ளடக்கிய எப்.டி.சி என்னும் மாத்திரைகளை கொண்டு "டாட்ஸ் எனப்படும் நேரடிப்பார்வையின்" கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சிகிச்சை முறையானது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும். டாட்ஸ் முறையில் காசநோய் சிகிச்சையை முழுகால அளவிற்கும் முறையாக எடுத்து கொண்டால் இந்நோயிலிருந்து பூரண குணம் பெறலாம்.

எச்.ஐ.வியும் காசநோயும் மோசமான இணைத்தொற்றாகும். இவை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயின் தன்மை அதிகரிப்பதையும். இறப்பையும் குறைக்கலாம். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் ஏ.ஆர்.டி மையம் மூலம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் காசநோயால் 38 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், காசநோயை விரைந்து கண்டறியும் அதி நவீன சிபிநாட் கருவியானது தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. அதே போல் ட்ரூநாட் கருவியானது மாவட்ட காசநோய் மையத்திலும் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய நாட் பரிசோதனையின் மூலம் காசநோய் அறிகுறியுள்ளவர்கள் தங்களுக்கு காசநோய் உள்ளதா இல்லையா என்பதனை இரண்டு மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம்.

சமீப காலமாக மருந்துக்கு கட்டுப்படாத எம்.டி.ஆர் காசநோயால் நமது சமுதாயம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஆரம்பநிலை காசநோயால் பாதிக்கப்படுவோர், தங்களுக்கான மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாததே எம்.டி.ஆர் காசநோய்க்கு காரணமாக அமைகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 48 நபர்கள் எம்.டி.ஆர் காசநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய அரசாணை (Z-28015/2/2012)ன் படி காசநோய் என்பது அறிவிக்க கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளது. இதன்படி ஒவ்வொரு தனியார் மற்றும் பெரு நிறுவன மருத்துவமனைகள் தங்களுடைய நோயாளிகளுக்கு காசநோய் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக மாவட்ட காசநோய் மையத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும். இதன் மூலம் காசநோய் இல்லா தூத்துக்குடி உருவாகும்.

காசநோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் "தழிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி காசநோயாளிகள் அனைவருக்கும் 5 வகையான உடற்குறியீடுகளை கணக்கீட்டு நோயின் தீவிரம் கண்டறியப்படுகிறது. அதற்கேற்ப சிகிச்சையளிப்பதன் மூலம் காசநோய் இறப்பு விகிதம் குறைக்கப்படவுள்ளது,

காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற்றிடும் வகையில் அவர்களுக்கு நிக்ஷாய் போஷன் யோஜனா திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.500/ சிகிச்சை காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. தழிழக அரசின் சார்பில் காசநோயால் பாதிக்கப்படும் உழவர் பாதுகாப்பத்திட்ட உறுப்பினர்களுக்கு இடைக்கால இயலாமை நிவாரணமாக மாதந்தோறும் ரூ.1000/ சிகிச்சை காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

2025ம் ஆண்டிற்குள் காசநோயை முடிவக்கு கொண்டு வர முனைப்புடன் செயல்படும் அரசோடு, அனைத்து அரசு, தனியார் துறைகள் மற்றும் சமூக நல இல்லாத அக்கறை உள்ள நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு காசநோய் இந்தியாவை உருவாக்கிட பாடுபட வேண்டும். இம்முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பாக கேட்டு கொள்வது.,

தொடர் இருமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். தும்மும் போதும், இருமும் போது வாயைத் துணியால் முடிக் கொள்ள வேண்டும்

சாலை மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது காசநோய் பற்றிய விழிப்புணர்வுகளை அருகில் உள்ளோரிடம் ஏற்படுத்திட வேண்டும்.

தொடர்ச்சியான இருமல், காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைந்து வருதல், சளியில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி காசநோய் பரிசோதனைகள் செய்து கொள்ளுதல் வேண்டும். காசநோயை ஒழிப்போம்! வளமான தேசத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post