கந்து வட்டி தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் துணை தலைவர், வழக்கறிஞர் அய்யலுச்சாமி, ப்ரோ நோட், செக் ஆகியவற்றை மாலையாக அணிந்து கொண்டு, குட்டிக்கரணம் அடித்தவாறு தனது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையெடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் தனது கோரிக்கை மனுவினை அளித்தார்.
அந்த மனுவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, தினவட்டி ஆகிய முறைகளில் கந்துவட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள், தினசரி சந்தை வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே, கந்துவட்டி தடை சட்டம் தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருந்தாலும், அதனை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது. ஆகவே, கந்துவட்டி தொடர்பாக பல மாற்றங்களை மேற்படி சட்டத்தில் செய்ய வேண்டுகிறேன். கந்துவட்டித் தொழில் செய்யும் நபர்கள் வன்முறை, கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம், தாதாயிசம் என குற்ற பின்னணி கொண்டவர்கள் இந்த கந்து வட்டித் தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள்.
அத்துடன் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லவே பயப்படுகிறார்கள். அதனையும் மீறி காவல் நிலையத்திற்கு செல்லும் போது மேற்படி கந்துவட்டி ரவுடிகளுக்கு ஆதரவாக மேற்படி காவல் நிலையங்களில் போலீசார் செயல்படுகிறார்கள். மேற்படி காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நாட வேண்டிய நிலை உள்ளது. மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தான் கந்துவட்டி புகார்களில் முதல் தகவல் பதிவு செய்யப்படுகிறது. நேரிடையாக வரக்கூடிய புகார்களை தட்டிக் கழித்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல்துறை நடந்து கொள்ளக் கூடிய எதார்த்த நிலையே தொடர்கிறது.
ஆகவே, தமிழகம் முழுவதும் கந்துவட்டி தொடர்புடைய புகார் மனுக்களை முழுமையாக விசாரனை செய்ய வேண்டும். அத்துடன் அதற்கென தனிப்பிரிவு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி விசாரணை அதிகாரியாக இருந்து செயல்பட தகுந்த நடவடிக்கையும், மேற்படி கந்துவட்டி சட்ட பிரிவுகளில் மாற்றமும் கொண்டு வரப்பட வேண்டும்.
கந்துவட்டி தொடர்புடைய குற்றவாளிகள், தொழில் ஈடுபடும் நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்ட வெற்று காசோலைகள், புரோ நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் பணத்தையும் இழந்துவிட்டு, பாதிக்கப்பட்ட நபர்கள் மீது பல்வேறு நீதி மன்றங்களில் வெற்று காசோலைகள் புரோ நோட்டுகளை வைத்து வழக்கு தொடர்ந்து கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்தை இழந்த நபர்களை மேலும் மேலும் அலைக்கழிப்படும் நிலை உள்ளது. ஆகவே, கந்துவட்டி தொடர்புடைய வெற்று காசோலைகள், புரோ நோட்டுகள் ஆகிய அனைத்தையும் காவல்துறை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
கந்துவட்டி கொடுமையால் பதிக்கப்பட்ட நபர்களின் சொத்துக்களான வீடு, நிலம், காலிமனை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கையகப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள் செய்து வருகிறார்கள். இதனைத் தடுக்க மேற்படி குற்றவாளிகள் செய்த பதிவு ஆவணங்களை அனைத்தையும் ரத்து செய்ய சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுதல், கடத்துதல், கடத்தி வைத்து துன்புறுத்துதல், கொலை செய்தல், பாலியல் துன்புறுத்துதல் போன்ற செயலை செய்யும் நிகழ்வுகளும் நடந்தேறி விடும் அவலம் இருப்பதால் மேற்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பும் அத்துடன் மேற்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாதிடும் சட்டத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிடவும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கந்துவட்டி கொடுமையால் கொலை செய்யப்பட்டாலே அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் ஒருவருக்கு அரசு வேலையும், அவர் வாழ்ந்த காலத்தில் ஈட்டும் ஊதியத்தை நஷ்ட ஈடாகத்தரவும், மேற்படி நஷ்ட ஈட்டை கொலை செய்யும் கந்துவட்டி கொலைக்காரர்களிடமிருந்து வசூல் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து காவல்துறை எச்சரிக்கையை வழக்கை மீறி கந்துவட்டித் தொழில் செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை தொடர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். (கந்துவட்டி என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலே குண்டர் சட்டம்) அத்துடன் கந்துவட்டி தொழில் செய்யும் நபர்களுக்கு ஏஜெண்ட்டுகள் உள்ளார்கள். அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட வேண்டும்.
கந்துவட்டி வழக்குகள் காலதாமதம் ஆகாமல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டிற்குள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, தமிழக அரசு எனது மனு குறித்து உரிய விசாரணை செய்து, நடைமுறை சிக்கல்களை கந்துவட்டி சட்டத்தில் மேற்படி நிபந்தனைகள் சேர்க்கப்பட சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.