வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இருபுறமும் 1, 500 - க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுத்து அகற்ற முடிவு செய்திருந்தது. இந்நிலையில் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக கவுண்டன்யமகாநதி ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு , வ. உ. சி தெரு , முருகசாமிதெரு , செல்லியம்மன் கோவில் தெரு , பெரியார்தெரு , அன்னை சத்யா தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500 - க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அகற்ற நீர்வள ஆதாரத்துறை , வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் 21 நாள் கால அவகாசம் கொண்ட நோட்டீசை வழங்க அப்பகுதிக்கு சென்றனர்.
ஆனால் அப்பகுதி பொது மக்கள் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நோட்டீசை பதாகைகளாக அப்பகுதியில் ஆங்காங்கே கட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.