கேரளாவைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 35.
கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த வித்யாநகரைச் சேர்ந்த ஸ்ருதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவர் அனீஷுடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரு ‘ராய்ட்டர்ஸ்’ #Reuters செய்தி நிறுவன அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று தளிபரம்பாக்கம் பகுதியில் தனது சொந்த வீட்டிற்கு அனீஷ் சென்றிருந்தார். அப்போது ஸ்ருதியின் தாய், தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் தனது செல்போனை எடுக்கவில்லை. அதனால், பெங்களூருவில் இன்ஜினீயராக பணியாற்றி வரும் ஸ்ருதியின் சகோதரர் நிஷாந்த், அபார்ட்மென்ட் செக்யூரிட்டியை போனில் தொடர்பு கொண்டார். பின்னர் ஸ்ருதியின் அறையை சோதனை செய்ய அறிவுறுத்தினார்.
அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது, அறையின் உள்ளே பூட்டப்பட்டிருந்தது. இதையறிந்த நிஷாந்த், அறைக்குள் வந்து பார்த்தபோது ஸ்ருதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஸ்ருதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ருதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.