"குடும்ப அட்டையில் கணவரின் பெயர் நீக்க ,கணவரின் அனுமதி தேவையில்லை" - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்.!

"கணவனால் கைவிடப்பட்ட /விவாகரத்து பெற்றுள்ள பெண்கள் குடும்ப அட்டையில் உள்ள கணவர் பெயரினை நீக்க கணவரின் அமைதி தேவையில்லை," என தமிழக அரசு உத்திரவிட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி நடைப்பெற்று வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013 நடைமுறைக்கு வந்த பின்பு மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் பொது மக்களில், குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர்களான விளிம்பு நிலை மக்கள் (நரிக்குறவர் போன்றோர்), பட்டியல் இனத்தவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. 

மேற்கண்ட நலிந்த பிரிவினர்களில் கணவனால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று அல்லது தனியாக வசித்து வரும் பெண்களுக்கு குறிப்பாக நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத நிலையில், கணவர் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அப்பெண்மணியின் பெயரை உரிய வாக்குமூலம் பெற்று குடும்ப தலைவரின் அனுமதியில்லாமல் நீக்கம் செய்து, நீக்கல் சான்று வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

எனவே, புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/விவாகரத்து பெற்றுள்ள பெண்கள் தனது கணவரின் குடும்ப அட்டையில் உள்ள பெயரினை கணவரின் அமைதியின்றி நீக்கம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரை அணுகி நீக்கல் சான்று பெற்று புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post