மக்கர் செய்த மைக்... மானாவாரியாக குறை சொன்ன கவுன்சிலர்கள்..

திருப்பூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று காலை மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் தலைமை தாங்கினார். கமிஷனர் கிரந்தி குமார் பாட்டி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேசிய மேயர் தினேஷ்குமார் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதை தீர்மானமாக கொண்டு வந்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசினார்கள். அப்போது 22 வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பேசியது: மாநகரில் குப்பைகள் 600 டன் அளவுக்கு தேங்குகிறது. அவற்றை விரைந்து அகற்ற வேண்டும். மற்றும் சாலைகளை சீர்படுத்தி தர வேண்டும் என்றார். 41 வது வார்டு கவுன்சிலர் பத்மநாபன்: திருப்பூரில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. அதை சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பதிக்க தோண்டப்பட்ட குழிகளை மூடி சாலைகள் அமைக்க வேண்டும் என்றார்.
46 வது வார்டு கவுன்சிலர் கோவிந்தசாமி: சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். வீதிகளில் சாக்கடைகள் தேங்குகிறது. சில பகுதிகளில் வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்லும் நிலை உள்ளது. இவற்றை விரைவில் சரி செய்ய மேயர் உறுதி அளித்துள்ளார். வார்டுகளில் வசதிகளை மேம்படுத்துவதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவோம். என்றார். 16 வது வார்டு கவுன்சிலர் தமிழ் செல்வி கனகராஜ்: எனது வார்டில் அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து 4 சுகாதார பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்தி தர வேண்டும். குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும். 50 வது வார்டு கவுன்சிலர் பெனாசிர்: எங்களது பகுதியில் 3 வார்டுகளும் சேர்த்து நடுநிலைப் பள்ளி கட்டித்தர வேண்டும். திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் பாலங்கள் அமைத்து தர வேண்டும். என்றார். கவுன்சிலர் ராஜேந்திரன்: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டு உள்ளது. குப்பை வரி அதிகளவில் உள்ளது. குப்பை வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து வீட்டு வரி, குடிநீர் வரி வசூல் செய்ய வேண்டும். குப்பை பெட்டிகள் சேதமடைந்து உள்ளது. புதிய பாக்ஸ்கள் வைக்க வேண்டும. குடிநீர் வால்வுகளில் திருப்பூர் முழுக்க கசிவு உள்ளது. அவற்றை மாற்ற வேண்டும். தெரு விளக்கு எங்குமே எரிவதில்லை. அதை சரி செய்ய வேண்டும். என்றார். 24 வது வார்டு கவுன்சிலர் நாகராஜ்: மக்கள் கவுன்சிலர்கள் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்கள். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளில் மண்ணை எடுக்க வேண்டும். எல்லா இடங்களிலும் சாக்கடை அடைத்துக் கிடக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதை சீர்படுத்த வேண்டும். இந்த பணிகளை செய்து விட்டுத்தான் வரி வசூல் செய்ய வேண்டும். மெயின் ரோடு தோண்டிப் போட்டு உள்ளதால் பஸ் வருவதில்லை. ரோடுகளை சரி செய்து பஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
42 வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி: புதிதாக பொறுப்பேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கோரிக்கை ஏற்று துப்புரவு பணியாளர் நியமனம் செய்வதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மேலாண்மைக் குழுவினை பொறுத்தவரை அவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆறு நிலைக்குழு பதவிகளுக்கும் உறுப்பினர்களில் 50 சதவீத பெண்களுக்கு ஒதுக்கீடு அளித்து உள்ளீர்கள். அதில் நிலைக்குழு தலைவர் பதவிகளுக்கும் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர வேண்டும். மீன் மார்க்கெட் வார சந்தையில் ஒப்ப்பந்தம் கோரிய ஒருவருக்கு அனுமதி வழங்க தீர்மானமாக வைத்து இருக்கிறீர்கள். அதை பிரித்துக் கொடுத்தால் அதிக வருமானம் வாய்ப்பு கிடைக்கும். ஆடு வதைக்கூடம் இதே போல பிரித்துக் கொடுக்க வேண்டும். ஒருவருக்கே கொடுக்க கூடாது. ஒப்பந்ததாரர் 19 பேருக்கு பிடித்தம் செய்யப்பட்ட வைப்புத் தொகையை உடனடியாக வழங்காமல் மாமன்ற உறுப்பினர்கள் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும். மாண்புமிகு எடப்பாடியார் நான்காவது குடிநீர் திட்டம் தொடங்கி வைத்தார். அதை விரைவுபடுத்த வேண்டும். நான்காவது குடிநீர் திட்டத்தையும், பாதாள சாக்கடை பணிகளுக்கும் தனி கவனம் செலுத்தி சீரமைப்பு செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளில் இணைக்கப்படாத சாலைகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். அதிகாரியிடம் சொன்னால் அசிஸ்டன்ட் தான் வந்து பார்க்கிறார். மாமன்ற உறுப்பினர் அழைத்தாலும் அதிகாரிகள் வந்து பார்ப்பதில்லை. வார்டுகளுக்கு தண்ணீர் கொடுக்க உடனடியாக பிளாஸ்டிக் டேங்க் வைத்து தண்ணீர் வழங்க வேண்டும். குப்பை அள்ளும் பணிக்கு 28 பேர் ஒதுக்கீடு செய்த நிலையில் 18 பேர் தான் பணிகளை செய்கிறார்கள். அதை சரி செய்ய வேண்டும். எனது வார்டில் நீர்நிலை பகுதிகளில் இருப்பவர்களுக்கு வேறு இடங்களில் இடம் தர வேண்டும். என்றார். கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருள் மீது மட்டுமே பேச வேண்டும் என்று சில கவுன்சிலர்கள் கூறினார்கள். அதற்கு மற்ற கட்சி கவுன்சிலர்களுக்கு தீர்மான பொருள் மீது மட்டும் பேசவில்லை. என்னை மட்டும் தடுக்க கூடாது. என்றார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப்பட்டது. அப்போது பேசிய மேயர் தினேஷ்குமார், ' எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கி இந்த மாமன்றம் சிறப்பாக செய்ல்பட்டு வருகிறது. முதல்வர் செயல்படுத்தும் திட்ட்டங்களின் வாயிலாக, மக்கள் எதிர்பார்ப்பு அனைத்துக்கும் தீர்வு காண முடியும். எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் 60 வார்டுக்குக்கும் மக்கள் பணிகள் செய்து தரப்படும் என்றார்.
51 வது வார்டு கவுன்சிலர் கேபிஜி செந்தில்குமார் பேசுகையில், ' மாமன்ற உறுப்பினர் பேசுவதற்கு மேயர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஆனால் தீர்மான பொருள் தாண்டி பேசினால் மேயர் தான் தடுத்திருக்க வேண்டும். ஆனால் தடுக்கவில்லை என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ' தொடர்ந்து மக்கள் பணியாற்றும் முதல்வர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். தொலை நோக்கு பார்வை, வெளிப்படையான நிர்வாகம் என்று சொன்னதற்கு எனது பாராட்டுக்கள். ஆணையர் இங்கு வந்து 10 மாதம் ஆகிவிட்டது. கொரோனா காலத்தில் மாநகராட்சி அதிகாரிகளின் சேவை மகத்தானது. அவர்களுக்கும் நன்றி தீர்மானம் கொண்டு வர வேண்டும். என்றார். 43 வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி: மாநகராட்சி அதிகாரிகள், எல் அண்டு டி அதிகாரிகள் அனைவரும் பணிகளில் இருந்து நழுவ கூடாது. 15 ஆயிரம் ஓட்டு இருக்கும் வார்டுகளில் 1 லட்சம் வெளியூர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். என்றார். 17 வது வார்டு கவுன்சிலர் செழியன்: எனது வார்டில் இன்று 22 பேரை துப்புரவு பணிக்கு அனுப்புவதாக சொன்னார்கள். ஆனால் 8 பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். எனது வார்டுக்கு 50 பேரை நியமிக்க வேண்டும். வார்டு வரையறை செய்ததில் பெரும் குழப்பம் செய்து இருக்கிறார்கள். கவுன்சிலர் செல்வராஜ் (சிபிஐ): நல்ல தண்ணீர் குழாய் உடைந்தால் மாநகராட்சி தான் சரி செய்ய வேண்டும். அதில் அலுவலர்கள் மெத்தனம் காட்டுகிறார்கள். எனது வார்டில் பாதி பாதாள சாக்கடை இல்லை. என்றார். பாத்திமா தஸ்ரின் (ஐ.யு.எம்.எல்.,): திருப்பூரில் பெரியகடை வீதி, நொய்யல் வீதி, கோம்பை தோட்டம், சொர்ணபுரி லே அவுட் பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் சேர்க்கவில்லை. அதை சேர்க்க வேண்டும். சங்கிலி பள்ளம், சத்யா நகர், ஜம்மனை ஓடைகளில் கரைகளை உயர்த்தி தர வேண்டும். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் வெளி நோயாளிகள் பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். ரவிச்சந்திரன் (சிபிஐ): திருப்பூரில் குப்பை பிரச்சினை தான் பெரும் பிரச்சினை. உடனடி தீர்வாக குப்பை பிரச்சினை தீர்க்க வேண்டும். சுகாதார பணியாளர்களில நிரந்தர பணியாளர் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. 300 பேர் தான் இருக்கிறார்கள். குப்பை பணியாளர்களிடம் உபகரணங்கள் இல்லை. 4 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர் 12 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. திருப்பூர் தியேட்டரில் மதவாத கும்பல் புகுந்து பொதுமக்களை கட்டாயப்படுத்தி உறுதி மொழி எடுக்க வைத்து உள்ளனர். இதை எல்லாம் தடுக்க வேண்டும். என்றார். 55 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தி சுப்பிரமணியம்: பெரிச்சிபாளையம் பகுதியில் டே தண்ணீர் வருகிறது. ஆனால் பொதுமக்களுக்கு வரவில்லை. எங்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக் கோட்டையார் நகர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார் காடேஸ்வரா தங்கராஜ்: 56 வது வார்டில் மேட்டில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. எந்தெந்த வார்டில் எந்தெந்த அதிகாரிகள் பார்க்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்களை வார்டுகள் தோறும் சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் ஶ்ரீ சக்தி தியேட்டர் சம்பவத்தை இங்கு பகிர்ந்தார். இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். என்றார். கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்: ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக ரோடுகள் சீரழிந்து போய் விட்டது. இதை சரி செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் லாரிகள் சாக்கடையில் விடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும். என்றார். இவ்வாறு தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. முதல் கூட்டத்திலேயே மைக் சரியாக வேலை செய்யாததால் கவுன்சிலர்கள் பேசியது சரியாக யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ச்சியாக சலசலப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post