ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி
தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். கொரோனா தொற்று பறவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறவில்லை. பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து வரும் 21 மற்றும் 22ம் தேதி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்க அமைக்கப் பட்டுள்ள தடுப்புக் கம்பிகள், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்ட கோபுரங்கள்,
மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்க கோவிலைச் சுற்றி பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள், அதன் பதிவுகள், சிறப்பு போக்குவரத்து வந்து செல்லும் இடங்கள், கூட்ட நெரிசலை சீர் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் மாற்றுப் பாதைகள் ஆகியவற்றை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்,சசிமோகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் குண்டம் திருவிழாவில் பங்கேற்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருக்கும் வசதிகளையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சத்தியமங்கலம் டிஎஸ்பி ஜெயபாலன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.