பாசஞ்சர் ரயில்கள் நேரம் மாற்றியதால் கோவை, திருப்பூர் பெண் தொழிலாளர்கள் அவதி...

திருப்பூர் வழியாக கோவை செல்லும் யணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் எனவும் இந்த ரயில் சிங்காநல்லூரில் நின்று செல்ல வேண்டும் எனவும் கோவையில் இருந்து தினமும் திருப்பூர் வந்து செல்லும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பனியன் தொழிலால் மளமளவென வளர்ந்த ஒரு மாநகரம் தான் திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட  மக்கள் வசிக்கிறார்கள்; 10 லட்சத்துக்கும் அதிகமான பனியன் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமிருந்து  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் மூலம் தினமும் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். 

கொரோனா காலத்திற்கு முன்பு கோவை ஜங்ஷனிலிருந்து கோவை - நாகர்கோவில் பாஸ்ட் பாசஞ்சர் ரயிலானது காலை 7.30 மணிக்கும், பாலக்காடு டவுன் - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர், 8.10 மணிக்கும், கோவை - சேலம் ரயில் 9.05 மணிக்கும் புறப்படும், இந்த பயணிகள் ரயில் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர் மற்றும் வஞ்சிபாளையம் ரயில் நிலையங்கள் வழியாக அங்கும் நின்று திருப்பூருக்கு வந்தடையும், அதேபோன்று மறுமார்க்கத்தில் மாலை 4.10 மணி, 5.15 மணிமற்றும் 7.12 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும்.
 இந்த ரயில்களில் தினசரிபல ஆயிரக்கணக்கான அதிகமான தொழிலாளர்கள் சீசன் டிக்கெட் பெற்று பயணித்து வருகின்றனர். 
கொரோனா காலகட்டத்துக்கு பிறகு தற்போது இந்த ரயில்கள் காலை கோவையில் ரயில் நிலையத்திலிருந்து கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் 8.00, பாலக்காடு டவுன் - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர் 8.12 புறப்பட்டு வடகோவை, பீளமேடு மற்றும் சோமனூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. அதேபோன்று மறுமார்க்கத்தில் மாலை 4.55 மற்றும் 5.15 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு கோவை செல்கிறது. சிங்காநல்லூரில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயில்களில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது பேருந்துகளில் சிரமத்தோடு பயணிக்கின்றனர் குறிப்பாக உடல் சோர்வு, அதிக நேரம் அதிக கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே மீண்டும் பழைய நேரத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 
இதுகுறித்து ரயில் பயணிகள் தெரிவிக்கையில்,
திருப்பூர் காதர்பேட்டையில் பணியாற்றும் பெண் அனிதா ரோஸ்லின்:   நான் 15 வருடமாக கோவையில் இருந்து திருப்பூருக்கு ரயில் மூலம் வந்து பணியாற்றி வருகிறேன். 

பேருந்தில் வருவதால் மிக உடல் சோர்வு ஏற்படுகிறது, மேலும் மூன்று பேருந்துகள் மாற்றி வேலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது, வேலைக்கு வந்தால் தான் குடும்பத்தை நடத்தக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் வேறுவழியின்றி கஷ்டப்பட்டு வீட்டு வேலையும் செய்து விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வருகிறேன். 

மேலும் பேருந்தில் வருவதால் 2 மணி நேரம் பயண நேரம் ஆகிறது, ஆனால் ரயிலில் வரும்பொழுது 45 நிமிடங்களில் வேலைக்கு வந்து விடுவேன். மேலும் கோவையில் இருந்து அதிக அளவிலான பெண்கள் குறிப்பாக சிங்காநல்லூர் பகுதியில் இருந்து மட்டும் 300க்கும் அதிகமான பெண்கள் ரயிலில் பயணித்து வந்துள்ளோம் ஆனால் தற்பொழுது ரயில் சேவை இல்லாததால் பல பெண்கள் வேலைக்கு வராமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர் எனவே விரைவில் பழைய நேரத்திற்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காதர்பேட்டை பனியன் கடை உரிமையாளர் அஞ்சலிதேவி: 
கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணிகள் ரயில் இல்லாததால் நான் சரியாக கடைக்கு வர முடியவில்லை பேருந்தில் வந்தால் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. 

இதனால் வருடத்தில் பாதி நாட்களுக்கு மேலாக கடையை திறப்பதில்லை மேலும் சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறுவதால் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறேன் .எனவே விரைவில் பழைய நேரத்திற்கு இந்த பயணிகள் ரயிலை மாற்ற வேண்டும். அதுவும் சிங்காநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். 

திருப்பூர் பெண் ஊழியர் வினோதினி:  இருக்கும் ஊரில் இருந்து தினசரி திருப்பூருக்கு பல வருடங்களாக வேலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

எங்கள் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பயணிகள் ரயிலை நம்பி பல வருடங்களாக வேலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணிகள் ரயில் இயக்கப்பட வில்லை. தற்போது நேரத்தை மாற்றி இயக்கப்படுகிறது. இது எங்களுக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது மாதாந்திர பயணிகள் டிக்கெட் 180 ரூபாய் மட்டுமே எங்களுக்கு செலவாகும் ஆனால் தற்போது மூன்று பஸ்கள் மாறி திருப்பூருக்கு வருவதால் தினசரி 110 ரூபாய் செலவாகிறது எனவே உடனடியாக பயணிகள் ரயிலை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார். 

காதர் பேட்டையில் பணியாற்றும் தொழிலாளி சபியா பேகம்:   நான் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து திருப்பூருக்கு பல வருடங்களாக வேலைக்கு வருகிறேன்.

சிங்காநல்லூரில் மட்டும் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டோர் திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இதில் பெண்கள் மட்டுமே 200க்கும் அதிகமானோர் உள்ளோம் ஆனால் தற்போது சிங்காநல்லூரில் காலை ரயில்கள் நிற்பதில்லை அதேபோன்று மாலையும் விரைவில் செல்கிறது எங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் பேருந்தில் வருவதால் காலை வெகுவிரைவில் புறப்பட வேண்டிய சூழ்நிலையும் மாலை கால தாமதமாக வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது இதனால் வீட்டில் உள்ளவர்களை சரிவர கவனிக்க முடியவில்லை நாங்கள் வேலைக்கு வந்தால் தான் எங்களால் குடும்பத்தை நடத்தக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம் எனவே வெகுவிரைவில் எங்களுக்கு பயணிகள் ரயிலை பழைய நேரத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்

 பனியன் நிறுவன தொழிலாளி  விஜயலட்சுமி: 
 நான் கோவையில் இருந்து திருப்பூருக்கு ரயில் மூலம் பல வருடங்களாக வந்து கொண்டிருந்தேன். 

ரயிலில் மாதாந்திரத் டிக்கெட் ரூபாய் 270 மட்டுமே ஒரு மாதம் முழுவதும் நாங்கள் பயணித்து வந்தோம் ஆனால் தற்போது பேருந்தில் வருவதால் தினசரி ரூபாய் 110 செலவாகிறது இது எங்களைப் போன்ற தினசரி தொழிலாளர்களுக்கு இது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் எந்த ஒரு உடல் அலைச்சலும் இல்லாமல் காலை 10 மணிக்கு திருப்பூர் வந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவோம் இதனால் வீட்டில் குழந்தைகளை கவனிக்கவும் முதியவர்களை கவனிக்கவும் வசதியாக இருந்தது. தற்போது இரவு வீட்டுக்குச் செல்வதற்கு 10 மணி வரை ஆகிறது சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே விரைவில் பழைய நேரத்திற்கு பயணிகள் ரயிலை இயக்க ணம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். 
திருப்பூரிலிருந்து கோவை, ஈரோட்டுக்கும், ஈரோடு, திருப்பூரில் இருந்து கோவைக்கும் சென்று வரும் தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் பயணிகள் ரயிலை பழைய நேரத்துக்கு மாற்றவும், சிங்கநல்லூரில் ரயில் நின்று செல்லவும், தென்னக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.  

கேரள மக்களையே செல்லப்பிள்ளைகளாக நினைத்து, ஒட்டுமொத்த எக்ஸ்பிரஸ் ரயில்களையும், கேரளாவில் சின்னச்சின்ன ரயில்நிலையங்களிலும் நிறுத்தச் செய்து இயக்கும் ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாட்டில் பாசஞ்சர் ரயில்களைக் கூட அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி இயக்காமல் ஒரவஞ்சனை செய்கிறார்கள் என்று நெடுங்காலமாக குமுறுகிறார்கள் கோவை, திருப்பூர் சேலம் பகுதி மக்கள். கேரளாவையே கவனிச்சா எப்படி, தமிழ்நாட்டு பயணிகளை கவனிங்க ஆபீசர்ஸ்...
Previous Post Next Post