திருப்பூர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர். திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், அதிமுகவினர் என 60 கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பட்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அடுத்தது மேயர் யார்? மாநகராட்சியின் எதிர்க்கட்சிக்குழு தலைவர் யார்? என்ற விவாதங்களும் இறுதிக்கட்ட எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர் திருப்பூர் காரர்கள்.
திருப்பூர் மாநகராட்சி அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சியின் தென்னம்பாளையம் பகுதி செயலாளராக இருக்கிற 42 வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி எதிர்க்கட்சி குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவில் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த அன்பகம் திருப்பதி ஏற்கனவே கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர், தற்போது தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளராக இருக்கிறார். 2011-ல் கவுன்சிலராக தேர்வாகி மாநகராட்சியின் நகரமைப்பு நிலைக்குழு தலைவராகவும் பதவி வகித்தவர்.
இவரது வார்டில் கடும் போட்டி நிலவிய போதும், தனித்துவமான வியூகங்கள் வகுத்து வெற்றி பெற்றவர் என்பதாலும், தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வருவதால் திருப்பூர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் என்பதாலும் அதிமுக தலைமை அன்பகம் திருப்பதியை எதிர்க்கட்சி குழு தலைவராக நியமிக்கப் போவதாக தெரிகிறது. மேலும் கட்சித்தலைமையிடத்தில் உள்ள பரிட்சயம், மாவட்ட நிர்வாகிகளிடம் அனுகுமுறை ஆகியவை காரணமாக அன்பகம் திருப்பதி திருப்பூர் மாநகராட்சியில் எதிர்க்கட்சிக்குழு தலைவராகிறார் என்கின்றனர் அந்த கட்சி நிர்வாகிகள்.
அன்பகம் திருப்பதி எதிர்க்கட்சி தலைவராகும் பட்சத்தில் காரசார விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.