திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் , திருப்பூர் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் , தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியில் திமுக 24 இடங்களிலும் , அதன் கூட்டணி கட்சியாக இருக்கும் சி.பி.ஐ 6 , சி.பி.எம் 1 , மதிமுக 3 , காங்கிரஸ் 2 , IUML 1 , மனித நேய மக்கள் கட்சி 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் , அதிமுக 17, தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பா.ஜ.க 2 , சுயேட்சைகள் 2 பேர் என மொத்தம் 60 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் இன்று காலை நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்து இருந்த ந.தினேஷ்குமார் மட்டும் வேட்புமனு செய்து இருந்தார்.
இந்த தேர்தலில் திமுக் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் பங்கேற்றனர். இதில் ந.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மேயர் தேர்வுக்கான சான்றிதழை ஆணையாளர் கிரந்தி குமார் பட்டி வழங்கினார்.
தொடர்ந்து தினேஷ்குமார் மேயர் அறையில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக் கொண்டார். இதில் திருப்பூர் எம். பி.சுப்பராயன், எம்.எல்.ஏ., க.செல்வராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சிபிஐ., மாவட்ட தலைவர் ரவி, திமுக தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி.நாகராஜ் மற்றும் தினேஷ்குமார் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மேயருக்கான உடை அணிந்து செங்கோலுடன் வந்த அவர் மாமன்றத்தில் கவுன்சிலர்கள் மத்தியில் பேசினார். அப்போது மேயர் ந. தினேஷ்குமார் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியினை முன்னோடி மாநகராக மாற்றுவேன். திருப்பூரின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிற பனியன் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் திட்டங்களை பெற்றுத்தருவேன். மாநகராட்சி மக்களின் நலனுக்காக எந்த நேரமும் அயராது உழைப்பேன். என்றும் கூறினார். தொடர்ந்து கவுன்சிலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.