கோவில்பட்டியில் பால் வியாபாரி வெட்டிப்படுகொலை


கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி கொலை செய்யப்பட்டார்.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 7-வது தெரு சேர்ந்தவர் மணி (50). இவர் வீரவாஞ்சி நகர் 9-வது தெரு பகுதியில் மாட்டுத் தொழுவம் அமைத்து மாடுகளைப் பராமரித்து, பால் வியாபாரம் செய்து வந்தார். இன்று மாலை மாட்டு தொழுவத்துக்கு சென்ற போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கங்கைகொண்டான் வடகரை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த மணி, கடந்த ஆண்டுதான் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதனால் முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த மணிக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் நைனார் என்ற மகனும் முத்துப்பேச்சி என்ற மகளும் உள்ளனர்.

Previous Post Next Post