தூத்துக்குடியில் சர்வதேச அளவிலான பர்னிச்சர் பூங்கா அடிக்கல் நாட்டினார்- முதல்வர் மு.க.ஸ்டாலின்


தூத்துக்குடியில் ரூ.1000 கோடி மதிப்பில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சர்வசேத அறைகலன் பூங்காவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பில் ஏறத்தாழ 1152 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சர்வசேத அறைகலன் பூங்காவுக்கு (பர்னிச்சர் பார்க்) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 


அப்போது தூத்துக்குடியில் ரூ.4,488 கோடி மதிப்பில் 14 நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்தன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

இந்தியாவில் மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் 3-வது இடத்தில் உள்ளது. மியான்மர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து மரத்தடிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. 


எனவே இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே மரப்பொருட்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த பர்னிச்சர் பூங்கா அமைந்துள்ளது. நாட்டில் உள்ள முன்னணி பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து உள்ளன. 


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்தடிகளை கொண்டு இங்கேயே பன்னாட்டு தரத்தில் உருவாக்கும் பர்னிச்சர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 

சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களையும் இந்தப் பூங்காவில் பயன்படுத்த உள்ளனர். மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்த பூங்காவில் இடம்பெற உள்ளது. 

பர்னிச்சர் உற்பத்தி, பேக்கிங், ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம்பெறுகின்றன. 

பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டு தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக் கூடம், பர்னிச்சர் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், 

ஓட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறுகிறது. இந்த பூங்கா மூலம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. பர்னிச்சர் பூங்கா மூலமாக நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 3½ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டம் மேலும் பல்வேறு வளர்ச்சியை பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்ந்து தூத்துக்குடி வந்த தமிழக முதல்வரை துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்றனர். 

அப்போது பொதுமக்கள் சிலர் முதல்வரிடம் மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட முதல்வர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா ஊர்வசி அமிர்தராஜ் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




Previous Post Next Post