ஓடும் பேருந்தில் பீர் குடித்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிபள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகள் சிலர் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது ‘பீர்’ குடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாணவிகளில் ஒருவர் பீர் பாட்டிலை கையில் தூக்கிய படி அதனை குடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்ற மாணவிகளும் எந்தவித தயக்கமும் இன்றி ஒருவர் பின் ஒருவர் பீர் பாட்டில் வாங்கி மாறி மாறி குடிக்கிறார்கள்.
பின்னர் போதையில் மாணவிகள் கூச்சலிட்டு பஸ்சில் ரகளையில் ஈடுபடுகின்றனர். அருகில் மாணவர்களும் நிற்கிறார்கள்.மற்ற பயணிகள் அருகில் இருப்பதை பற்றி கவலைப்படாமல் ஓடும் பஸ்சில் மாணவிகள் பீர் குடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர்.
இந்த காட்சியை மாணவி ஒருவரே வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பீர் குடித்து பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவிகளை தனித்தனியாக அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்க திட்டமிட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியிலும் ஆசிரியர்கள் தனியாக விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேரி ரோஸ் மிர்மலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் ஆகியோர் கூறுகையில்:-
சமூக வலைதளத்தில் மாணவிகளின் வீடியோவை பார்த்தோம். பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம்.
விரைவில் அரசு பொதுதேர்வு தொடங்க உள்ளது. இதற்காக மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வரும் இந்த வேளையில் இது போன்ற செயல்கள் வருத்தம் அளிக்கிறது, என கூறினர்.